ரயிஸ்:மெர்டேகா தின பிஎன் சுலோகத்தில் தப்பு ஏதுமில்லை

பிஎன்னின் தேர்தல் சுலோகமான “Janji ditepati” (வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன), இவ்வாண்டு மெர்டேகா தினக் கருப்பொருளாகவும் பயன்படுத்தப்படுவது தப்பல்ல என்கிறார் தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம்.

மாற்றரசுக் கட்சிகளும் அதேபோன்றதொரு சுலோகத்தை உருவாக்கிப் பயன்படுத்திக்கொள்ளலாம்.அது பல நாடுகளிலும் பின்பற்றப்படும் ஒரு ஜனநாயக முறைதான் என்றாரவர்.

“மாற்றரசுக் கட்சிகள் அதைத் தேர்தல் சுலோகம் என்று நினைப்பதில் தவறில்லை.

“மாற்றரசுக் கட்சிகளும் ‘நாங்கள் அதைச் செய்தோம், இதைச் செய்தோம்’ என்று கூறிக்கொள்ளலாம்.தப்பே இல்லை”, என்றவர் சொன்னார்.

“இது வழக்கமானதே.சிங்கப்பூர் இதைச் செய்கிறது.ஜப்பான் செய்கிறது.மற்ற நாடுகளிலும் செய்கிறார்கள்”, என்று தம் அமைச்சில் சிறந்த சேவைகளுக்கான விருதளிப்பு நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரயிஸ் குறிப்பிட்டார்.

அச்சுலோகம் மெர்டேகா தினக் கருப்பொருளாக பயன்படுத்தப்படுவதை மாற்றரசுக் கட்சிகள் குறைகூறியுள்ளதற்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.