உள்துறை அமைச்சு ‘அவாங் அராங்’ கேலிச் சித்திரப் புத்தகத்தை விசாரிக்கிறது

‘அவாங் அராங்’ அல்லது ‘திரு அடுப்புக்கரி’ யைச் சித்தரிக்கும் கேலிச் சித்திரம் ஒன்றையும் கொண்டுள்ள ஒரே மலேசியா கேலிச் சித்திரப் புத்தக வெளியீட்டாளர்கள் மீது உள்துறை அமைச்சு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

அந்தப் புத்தகம் இனப் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடும் என ஏற்கனவே பல அரசு சாரா அமைப்புக்கள் புகார் செய்துள்ளன.

அந்த விஷயத்தை எழுப்பிய மலாய் மெயில் நாளேடு புத்ராஜெயாவில் உள்ள உள்துறை அமைச்சு தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டு அதனிடம் உள்ள ‘ஒரே மலேசியா மக்கள் கேலிச் சித்திர சஞ்சிகைகளை’ ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

ஜுன் மாதம் 25ம் தேதி புக்கிட் ஜலிலில் நடத்தப்பட்ட Teksi Rakyat 1Malaysia (TR1Ma) நிகழ்வின் போது கண்டு பிடிக்கப்பட்ட அந்தக் கேலிச் சித்திரப் புத்தகங்களின் மூன்றாவது நான்காவது பதிப்புக்களை ஒப்படைக்குமாறு நிருபரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதாக அந்த நாளேட்டைச் சேர்ந்த ஒரு வட்டாரம் கூறியது.

“இதற்குப் பின்னர் இனப் பிரச்னைகளைத் தொட வேண்டாம் என அவர்கள் (உள்துறை அமைச்சு) எங்களைக் கேட்டுக் கொண்டது,” என அந்த வட்டாரம் நேற்று மலேசியாகினியிடம் தெரிவித்தது.

ஒரே மலேசியா சின்னம் பொறிக்கப்பட்டிருந்த அந்த கேலிச் சித்திரப் புத்தகத்தில் ‘1Malaysia vs 1PATI’ என்னும் பகுதி இடம் பெற்றுள்ளது. அதில் சிறுவர்கள் இந்த நாட்டு சமுதாயத்தில் பல்வகைத் தன்மையை பாராட்டுவதாக காட்டப்பட்டுள்ளது.

ஆனால் அதே சிறுவர்கள் ‘Awang Arang’, அல்லது ‘ திரு. அடுப்புக்கரி என அழைக்கப்பட்ட கறுப்பு நிற சருமத்தைக் கொண்ட மனிதர்களிடமிருந்து விலகி ஒடுவதாக இன்னொரு படத்தில் காட்டப்பட்டுள்ளது.

அதன் விநியோகம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது

பொது நிகழ்வுகளில் அந்தக் கேலிச் சித்திரப் புத்தகம் விநியோகம் செய்யப்படுவது பற்றி கோமாஸ் Pusat Komunikasi Masyarakat கேள்வி எழுப்பியுள்ளது.

சரும நிறத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதற்கும் இனவாதத்தை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என அது கூறியது.

அத்தகைய வெளியீடுகள் கீழறுப்புத் தன்மையைக் கொண்டவை எனக் குறிப்பிட்ட சுவாராம் என்ற Suara Rakyat Malaysia அந்தப் புத்தகங்களை பள்ளிப் பிள்ளைகள் படித்தால் இனப் பதற்ற நிலை உருவாகும் என எச்சரித்தது.

அந்தக் கேலிச் சித்திரப் புத்தகத்தை வெளியிட்ட Blue Pipe Enterprises நிறுவனத்துடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என ஜுலை 13ம் தேதி மலாய் மெயில் செய்தி வெளியிட்டது.

இதனிடையே உள்துறை அமைச்சின் வெளியீடுகள், திருக்குர் ஆன் வாசகப் பிரிவுக்குத் தெரியாமல் அந்தப் புத்தகம் வெளியிடப்பட்டு விட்டதாக அதன் செயலாளர் அப்துல் அஜிஸ் முகமட் நோர் தெரிவித்தார்.

என்றாலும் அமைச்சு வெளியீட்டாளரிடமிருந்து விளக்கம் கோரும் என்றும் அவசியமானால் அந்தக் கேலிச் சித்திரப் புத்தகத்தைத் தடை செய்யும் என்றும் அப்துல் அஜிஸ் சொன்னார்.