வங்காள தேசத் தொழிலாளர்கள், ஆளும் பிஎன்-னுக்கு வாக்களிக்க இணங்கினால் அவர்களுக்கு மலேசியா குடியுரிமை வழங்குகிறது என அந்த நாட்டின் பிரதமர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் அமைப்பு ஒன்று தனது இணையத் தளத்தில் வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுவதை இந்த நாட்டிலுள்ள வங்காள தேசத் தூதரகம் மறுத்துள்ளது
அந்தக் கட்டுரை குறித்து வங்காள தேச அரசாங்கத்துக்கோ அல்லது பிரதமர் அலுவலகத்துக்கோ ஏதும் தெரியாது என மலேசியாவுக்கான வங்காள தேசத் தூதர் ஏகேஎம் அடிக்குர் ரஹ்மான் கூறினார். சர்ச்சைக்குரிய அந்தக் கட்டுரையைத் தாம் பார்க்கவும் இல்லை. படிக்கவும் இல்லை என்றார் அவர்.
“அந்த விவகாரம் அடிப்படையற்றது. தீய நோக்கம் கொண்டது. ஏதோ ஒரு மூலையில் அமர்ந்துள்ள ஒருவர் மலேசியாவுக்கும் வங்காள தேசத்துக்கும் இடையில் நிலவுகின்ற உறவுகளைச் சீர்குலைக்க விரும்புகிறார்,” என அவர் மலேசியாகினி தொடர்பு கொண்ட போது கூறினார்.
அந்த விவகாரம் பற்றிய செய்தியை பிகேஆர் கட்சி ஏடான சுவாரா கெஅடிலான் வெளியிட்டது. கடந்த ஆண்டு தென் கொரியாவுக்கும் மலேசியாவுக்கும் வங்காள தேசப் பிரதமர் ஷேக் ஹாசினா மேற்கொண்ட பயணம் பற்றிய சுருக்கமான விளக்கம் எனக் கருதப்படும் இணைப்பையும் தனது செய்திக்கு ஆதாரமாக அது குறிப்பிட்டது.
வங்காள தேசப் பிரதமர் அலுவலகத்தில் இயங்கும் அரசு சாரா அமைப்புக்கள் விவகாரப் பிரிவின் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டிருந்த விளக்கத்தில் மலேசியாவில் வேலை செய்யும் “நமது குடிமக்களில்” சிலருக்கு மலேசிய அரசாங்கம் குடியுரிமையும் வாக்குரிமையையும் வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆளும் கூட்டணியைப் பிரதிநிதிக்கும் கட்சிக்கு அவர்கள் வாக்களிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் வங்காள தேசிகளுக்கு மலேசியக் குடியுரிமை “எளிதாக வழங்கப்படுவதை வங்காள தேசப் பிரதமர் அலுவலகத்தில் உள்ள “உயர் நிலை வட்டாரங்கள்” உறுதிப்படுத்தியதாகவும் அந்தக் கட்டுரை தெரிவித்தது.
ஆனால் மலேசியாகினி இன்று மேற்கொண்ட இரண்டாவது சோதனையின் போது சம்பந்தப்பட்ட இணையத் தளத்திலிருந்து அந்தக் கட்டுரை நீக்கப்பட்டுள்ளதைக் கண்டு பிடித்தது. அந்தத் தகவல் குறித்த செய்திகள் வெளியானதும் மலேசியாவில் கடந்த வார இறுதியில் அந்த விவகாரம் கடுமையாக குறை கூறப்பட்டது.
தீய நோக்கம் கொண்ட அவர்கள் ‘கிறுக்குப் பிடித்தவர்கள்’
சர்ச்சைக்குரிய அந்தக் கட்டுரை குறித்து வங்காள தேச அரசாங்கத்துக்கோ, கோலாலம்பூரில் உள்ள அதன் தூதரகத்துக்கோ ஏதும் தெரியாது என மீண்டும் வலியுறுத்திய அடிக்குர், அதனை “அபத்தமானது, “கிறுக்குப் பிடித்த மனிதர்களுடைய வேலை” என்றும் வருணித்தார்.
கடந்த ஆண்டு மலேசியாவுக்கு வந்த ஷேக் ஹாசினா மலேசியப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குடன் பேச்சு நடத்தியதை உறுதி செய்த அவர், மலேசியாவில் உள்ள வங்காள தேசத் தொழிலாளர்களைச் சட்டப்பூர்வமாக்குவது பற்றி மட்டுமே அவர்கள் விவாதித்ததாகச் சொன்னார். வங்காள தேசிகளுக்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்படுவது குறித்து பேசப்படவில்லை.
வங்காள தேசப் பிரதமர் அலுவலகத்தில் இயங்கும் அரசு சாரா அமைப்புக்கள் விவகாரப் பிரிவின் இணையத் தளத்தில் யார் அந்தக் கட்டுரையை இணைத்திருக்க முடியும் என்ற கேள்விக்கு பதில் அளித்த அடிக்குர், தமக்கு எதுவும் நிச்சயமாகத் தெரியாது என்றார்.
“பிரச்னையை உருவாக்க விரும்பிய யாரோ ஒருவர் அதனைச் செய்திருக்கலாம். அது அபத்தமானது என நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். அது குறித்து எனது அரசாங்கத்திற்கோ தூதரகத்திற்கோ எதுவும் தெரியாது”, என்றார் அவர். அந்த விவகாரம் மீது மலேசிய உள்துறை அமைச்சுடன் தொடர்பு கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.