போலீஸ்: ஜெம்மா இஸ்லாமியாவும் கம்யூனிஸ்ட்களும் எதிர்க்கட்சிகளுக்குள் ஊடுருவுகின்றனர்

ஜேஐ எனப்படும் ஜெம்மா இஸ்லாமியா பயங்கரவாதிகளும் முன்னாள் கம்யூனிஸ்ட்களும் எதிர்க்கட்சிகளுக்குள் ஊடுருவியிருப்பது போலீஸ் சிறப்புப் பிரிவு விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

வரும் தேர்தலில் தாங்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவதற்கு அவர்கள் பெரு முயற்சி செய்து வருகின்றனர்.

அந்தத் தகவலை E2 (M) தேசிய சமூக தீவிரவாத மருட்டல் பிரிவுத் தலைவர் முகமட் சோபியான் முகமட் மாக்கினுதின் வெளியிட்டார்.

அவர் நேற்று நாடாளுமன்றத்தில் தேசிய இளம் தலைவர்கள் மாநாட்டில் பேசினார்.

ஜெம்மா இஸ்லாமியா சக்திகள் பாஸ் கட்சியிலும் கம்யூனிஸ்ட் சக்திகள் டிஏபி-யிலும் ஊடுருவ முயலுவதாக முகமட் சோபியான் கூறிக் கொண்டார் என அவர் சொன்னதாக பெர்னாமா தகவல் ஒன்று குறிப்பிடுகிறது.

“பல பிஎஸ்எம், பிகேஆர் தலைவர்கள் பாங்காக்கிற்கும் தென் தாய்லாந்துக்கும் அடிக்கடி பயணம் செய்கின்றனர். முன்னாள் மலாயா கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களைச் சந்திப்பதற்காக அவர்கள் அங்கு ரகசியமாகச் செல்வதாக நம்பப்படுகின்றது.”

“அதன் விளைவாக உருவாகியுள்ள புதிய அரசியல் தொடர்பான சிந்தனைகள் இந்த நாட்டின் அடிப்படைப் பண்புகளைப் பாதிக்கும் சாத்தியத்தைக் கொண்டுள்ளன,” என்றார் முகமட் சோபியான்.

“உண்மையில் அந்த நடவடிக்கைகளுக்கு அந்நிய அரசு சாரா அமைப்புக்கள் நிதி உதவி, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பயிற்சிகள், தேர்தல்களை எதிர்கொள்வதற்கு சில நிபுணத்துவங்களில் பயிற்சி போன்ற வழிகளில் உதவி வருகின்றன.’

“தேசியப் பாதுகாப்பு நமது கூட்டுப் பொறுப்பு” என்னும் தலைப்பில் முகமட் சோபியானுடைய உரை அமைந்திருந்தது.

நேற்று நிகழ்ந்த அந்த ஒரு நாள் மாநாட்டை பிடிஎன் ( பிரதமர் துறையில் உள்ள தேசிய குடியியல் பிரிவு) உயர் கல்வி அமைச்சு, ஆசிரியர் கல்விக் கழகம், மலேசிய இளைஞர் மன்றம் ஆகியவை நாடாளுமன்றத்தின் ஒத்துழைப்புடன் நடத்தின.

குழப்பத்தை ஏற்படுத்தி ஆளும் கட்சிகளைப் பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் அரசாங்கத்தின் மீது பகைமை கொள்ளும் அரசு சாரா அமைப்புக்களை உள்நாட்டில் உருவாக்குவதே அந்த நடவடிக்கைகளின் நோக்கம் என்றும் முகமட் சோபியான் குறிப்பிட்டார்.

“சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பெரிதாக்கி பொதுத் தேர்தலுக்கு முன்னதாக மக்கள் அரசாங்கத்தை வெறுக்கத் தூண்டும் எதிர்க்கட்சிகள், அரசு சாரா அமைப்புக்கள் ஆகியவற்றின் நடவடிக்கைகள் குறித்து நாங்கள் கவலை அடைந்துள்ளோம்.”

“அவை போலீசாருடைய கவனத்தைத் திசை திருப்பும் வகையில் மேலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தக் கூடும் அல்லது சம்பவங்களை உருவாக்கக் கூடும்.”

“பொது மக்களை சாலைகளுக்கு ஈர்க்கும் பெரிய அளவிலான நடவடிக்கைகள் இந்த நாட்டில் தொடர்ந்து பரவி வருகின்றது,” என்றார் முகமட் சோபியான்.

“பெர்சே, ஆரஞ்சு, பச்சை” பேரணிகள் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அவை பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு வகுக்கப்பட்ட அண்மைய திட்டங்கள் என்றும் அவர் சொன்னார்.

“அது தவிர நாடு தழுவிய நிலையில் ஆண்டு முழுவதும் பிரச்சாரம் செய்யும் பண்பாடும் பரவியுள்ளது. குறிப்பிட்ட அரசியல் பண்புகளைக் கொண்ட தகவல்களை பொது மக்களை வழங்குவதே அதன் நோக்கமாகும்.’