“நீர் வள அமைச்சருக்கு ‘முதுகெலும்பு இல்லை’ எனக் குறை கூறப்பட்டுள்ளது

சிலாங்கூரில் தண்ணீர் தொழிலை மறுசீரமைப்புச் செய்வதற்கு மாநில அரசாங்கம் தெரிவித்த யோசனைகளை அங்கீகரிப்பதற்கு எரிசக்தி, பசுமைத் தொழில் நுட்ப அமைச்சர் பீட்டர் சின் -னுக்கு ‘அரசியல் முதுகெலும்பு இல்லல’ என குறை கூறப்பட்டுள்ளது.

“2008ம் ஆண்டு தொடக்கம் சிலாங்கூர் மாநில அரசாங்கம் சிலாங்கூரில் முழுமையாக தண்ணீர் தொழிலை மறுசீரமைப்பு செய்வதற்கு பல வகையான யோசனைகளை தொடர்ந்து பொறுமையாக முன் வைத்து வருகின்றது.”

“எங்கள் யோசனைகளுக்கு பச்சை விளக்கு காட்ட அமைச்சர் பீட்டர் சின் -னுக்கு அரசியல் முதுகெலும்பு இல்லாததே தேக்கத்திற்குக் காரணம்,” என சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினரான  எலிசபத் வோங் விடுத்த அறிக்கை கூறியது.

சிலாங்கூர் தண்ணீர் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவைக் குழு பற்றி கூட்டரசு அரசாங்கம் மாநில அரசுடன் ஆலோசனை நடத்த தவறியுள்ளது அதனுடைய “கட்சிச் சார்பான, பாரபட்சமான” போக்கைக் காட்டுகிறது என்றும் அந்த புக்கிட் லஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் சொன்னார்.

சிலாங்கூர் அரசின் பங்கேற்பு இல்லாமல் எந்த அர்த்தமுள்ள விளைவும் ஏற்படாது என்பதைக் கூட்டரசு அரசாங்கம் உணர வேண்டும் என்றார் அவர்.

“இது தடைகளை ஏற்படுத்தும் கூட்டரசு அரசாங்கப் போக்கைக் காட்டுகின்றது. அது சிலாங்கூர் மக்களுடைய நலன்களுக்கு மேலாக அரசியலையும் தனது சேவகர்களுடைய ஆதாயத்தையுமே முக்கியமாகக் கருதுகின்றது.”

ஏற்றத் தாழ்வான ஒப்பந்தங்கள்

சிலாங்கூர் தண்ணீர் நிலவரத்தை கண்காணிக்க துணைப் பிரதமர் முஹைடின் யாசின் தலைமையில் ஐவர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதை நேற்று சின் அறிவித்தார்.

அந்த மாநிலத்தின் தண்ணீர் பிரச்னைகளைக் குறிப்பாக தண்ணீர் பங்கீட்டை அமலாக்கப் போவதாக சபாஷ் அறிவித்துள்ளது பற்றியும் அந்த நிறுவனத்தை எடுத்துக் கொள்ள சிலாங்கூர் விரும்புவது பற்றியும் ஆய்வு செய்ய அமைச்சரவை எண்ணம் கொண்டுள்ளதாக சின் சொன்னார்.

மாநில அரசாங்கம் மாநில மக்களைப் பிரதிநிதிப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம் என்பதை நினைவில் கொள்வது அவசியம் என்றும் சுற்றுப்பயண, பயனீட்டாளர் விவகாரங்கள், சுற்றுச்சூழல் ஆகியவற்ருக்குப் பொறுப்பான ஆட்சி மன்ற உறுப்பினருமான வோங் சொன்னார்.

அதனால் தண்ணீர் பங்கீட்டை அமலாக்கப் போவதாக கூறி “அச்சத்தை ஏற்படுத்தும்” முயற்சிகளைப் பார்த்துக் கொண்டு மாநில அரசாங்கம் சும்மா இருக்கவும் போவதில்லை. ‘ஏற்றத் தாழ்வான ஒப்பந்தங்கள்’ அடிப்படையில் தொடர்ந்து இயங்கவும் அது விரும்பவில்லை.

“எங்கள் நம்பிக்கையும் உணர்வுகளும் தெளிவானவை. சிலாங்கூர் மக்கள் நலனையும் உரிமையையும் பாதுகாப்பதே அவை. அதனை அடையும் பொருட்டு சபாஷ் நிறுவனத்தை எடுத்துக் கொள்ளும் முயற்சி அறிவிக்கப்பட்டுள்ளது போல முழு வேகத்தில் தொடரும்,” என்றும் வோங் குறிப்பிட்டார்.