இட்ரிஸ் ஜலா:மலேசியாவின் கடன் சமாளிக்கத்தக்கதே

மலேசியாவின் கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 55விழுக்காட்டுக்கும் குறைவு என்பதால் சமாளிக்கத்தக்கதே என்று பிரதமர்துறை அமைச்சர் இட்ரிஸ் ஜலா கூறுகிறார்.

கடந்த ஆண்டில் 53.8விழுக்காடாக இருந்த தேசிய கடன் நம் சக்திக்கு உட்பட்டதுதான் என்றும் நிதிப் பற்றாக்குறையை குறைக்க அரசாங்கம் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

“நிதிப் பற்றாக்குறையை ஒவ்வொரு ஆண்டும் குறைப்பதற்கு பொருளாதார உருமாற்றத் திட்ட அமலாக்கத்தின்வழி சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறோம்.கடந்த ஆண்டில் 5.0விழுக்காடாக இருந்த நிதிப்பற்றாக்குறையை 2012-இல் 4.7விழுக்காட்டுக்குக் குறைக்க இலக்குக் கொண்டிருக்கிறோம்”. இட்ரிஸ்,இன்று கோலாலம்பூரில் ஜிடிபி விளக்கக் கண்காட்சியின்போது செய்தியாளர்களிடம் பேசினார்.

விரைவு ரயில் சேவைத் திட்டத்துக்கு(எம்ஆர்டி) அரசாங்கம் நிதி திரட்ட வேண்டியுள்ளது என்றாலும் கடன் அளவு 55விழுக்காட்டுக்கும் குறைவாகவே வைத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது என்றாரவர்.

“நாம் முதலீடு செய்வதற்காகத்தான் கடன் வாங்குகிறோம்.அதனால் நம் ஜிடிபி-யும் பொருளாதாரமும் வளர்ச்சி காணும்.கடன் அளவும் குறையும்”.

பெமாண்டுவின் தலைமை செயல் அதிகாரியான இட்ரிஸ், மலேசியாவின் ஜிடிபி முதல் காலாண்டில் 4.7விழுக்காடாக இருந்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்றார்.சிங்கப்பூரின் பொருளாதாரம்கூட உலகப் பொருளாதாரச் சுணக்கத்தின் காரணமாக 1.4விழுக்காடுதான் வளர்ச்சி கண்டது என்றார்.

ஜிடிபி விளக்கக் கண்காட்சி, கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறுகிறது. தன் செயல்பாடுகள் குறித்து மக்களிடமிருந்து பின்னூட்டம் பெறும் நோக்கத்துடன் பெமாண்டு அதற்கு ஏற்பாடு செய்துள்ளது.