மலேசிய மருத்துவமனைகளில் பிறந்தும் குடியுரிமை பெறுவதில் அவதிப்படுகின்றனர் நமது இந்திய சமூகத்தினர். இப்பிரச்னையில் 40,000 இந்தியர்கள் சிக்கிக் கொண்டிருக்கின்றனர் என்பது வேதனைக்குரியதே என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.
“19 பிப்ரவரி முதல் 26 பிப்ரவரி வரை நடைபெற்ற மை டஃப்தார் பதிவில் மொத்தம் 6,541 இந்தியர்கள் பதிந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் தகவல் அளித்திருந்தார்.”
பிறகு மை டஃப்தார் பதிவின் வழி 1,000 இந்தியர்களுக்கு அடையாளப் பத்திரங்கள் மிக விரைவில் கிடைக்கும் என அறிவித்திருந்தார் மனிதவள அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம்.
ஆனால் மாதங்கள் பல கடந்தும் இந்தியர்களின் குடியுரிமை பிரச்னை இதுவரையில் தீர்க்கப்படவில்லை. இதுவரை எவருக்கும் குடியுரிமை வழங்கப்படாதது ஏன் எனக் கேள்வி எழுப்பிய சார்ல்ஸ், இந்தியர்களின் அடிப்படை பிரச்னைகளைத் தீர்ப்பதில் ஏன் அரசாங்கம் மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருகிறது என்று மேலும் வினவினார்.
“தற்போது அரசாங்கம் சட்டவிரோத அந்நிய தொழிலாளர்களைப் பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றது. குறுகிய காலத்திலேயே 1.5 மில்லியன் அந்நிய தொழிலார்களைப் பதிவு செய்துள்ள அரசாங்கம், மலேசியாவில் பிறந்த இந்தியர்களின் குடியுரிமை பிரச்னையைத் தீர்க்க மட்டும் ஏன் ஆண்டாண்டு காலமாக இழுத்துக்கடித்துக் கொண்டிருக்கிறது?”
ஒருவருக்கு நான்கு மணி நேரம், இந்தியருக்கு 40 ஆண்டு காலம்
நிரந்தர வசிப்பிடத் தகுதி கொண்ட மிஸ்மாவிற்கு நான்கே மணிநேரத்தில் குடியுரிமை வழங்கபட்டது! ஆனால், இந்தியர்கள் முறையான ஆவணங்கள் வைத்திருந்தும் குடியுரிமை பெறுவதற்காக 30-40 ஆண்டுவரையில் காத்திருக்க வேண்டியுள்ளது.
“இந்தச் சூழ்நிலை மாற வேண்டும். அதற்கு மனிதவள அமைச்சும் அரசாங்கமும் களம் இறங்க வேண்டும். இந்தியர்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்க்கப்பட வேண்டும். குடியுரிமை ஒவ்வொரு மனிதனின் உரிமை. மலேசியாவில் பிறந்த ஒவ்வொருவருக்கும் குடியுரிமை பெறும் உரிமை உள்ளது” என்பதை விளக்கிய சார்ல்ஸ், இந்தியர்களின் உரிமையும் காக்கப்பட வேண்டும் என்றார்.