நீதிமன்றங்கள் பெரும்பாலும் அரசுக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பளிக்கும் என்று அடிக்கடி கூறப்பட்டாலும் உண்மை அதுவல்ல என்கிறார் அண்மையில் பணி ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ஸாக்கி அஸ்மி.
கூட்டரசு அரசாங்கத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தையும் கணக்கெடுத்துப் பார்த்தால் பெரும்பாலான வழக்குகளில் அரசுக்கு எதிராக தீர்ப்பு கூறப்பட்டிருப்பதைக் காணலாம். மலேசியாகினியுடனான நேர்காணலில் ஸாக்கி இவ்வாறு கூறினார்.
“பெல்டா(கெமாஹாங் 3) வழக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. பெல்டா தலைவர் யார் தெரியுமா? பிரதமர்தான்.அந்த வழக்கில் (பெல்டா) குடியேற்றக்காரர்களுக்கு ரிம11மில்லியன் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று நான்தான் தீர்ப்பு கூறினேன்”.
அந்த வழக்கு(உயர்நீதி மன்றத்தில்) விசாரணை செய்யப்பட்டபோது பெல்டா வழக்குரைஞர் நிதிமன்றம் வரவில்லை.இதனால், குடியேற்றக்காரர்கள் வெற்றி பெற்றார்கள். எனவே, வழக்குரைஞர்தான் அந்தத் தோல்விக்குக் காரணம் என்பதால் பெல்டா அவர்மீது வழக்கு தொடுக்க வேண்டும்.
“எப்படி இப்படி ஒரு தீர்ப்பு அளிக்கலாம் என்று(அரசாங்கத் தரப்பிலிருந்து) என்னிடம் கேட்கப்பட்டது. அதுதான் சட்டம் என்று நான் பதிலளித்தேன்”.
2010 ஜனவரி 19-இல், 354 குடியேற்றக்காரர்களை ஏமாற்றியதற்காக பெல்டா ரிம11மில்லியன் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று கூட்டரசு நீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்புக்கு எதிராக முறையீடு செய்ய பெல்டா அனுமதி கேட்டபோது அனுமதி மறுக்கப்பட்டது.
அந்த வழக்கை ஸாக்கியைத் தலைவராகக் கொண்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழு விசாரணை செய்தது. அக்குழுவில் இடம்பெற்றிருந்தவர்களில் ஒருவர் கோபால் ஸ்ரீராம். இன்னொருவர் அண்மையில் மலாயா தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட சுல்கிப்ளி அஹ்மட் மகினுடின்.
ஆள்கொணர்வு ஆணை வழக்குகளில் பலருக்கு வெற்றி
விசாரணையின்றித் தடுத்து வைக்கப்படுவோரை விடுவிப்பதற்க்காக செய்துகொள்ளப்படும் ஆள்கொணர்வு ஆணை விண்ணப்பங்களில் நீதிமன்றங்கள் பெரும்பாலும் அரசுக்கு எதிராகத்தான் தீர்ப்பு கூறியுள்ளன என்றும் ஸாக்கி வலியுறுத்தினார்.
“எத்தனை பேர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பாருங்கள்….நீதிமன்ற ஆவணங்கள் ஒன்றும் இரகசியமானவை அல்ல. பல வழக்குகளில் அரசுக்கு எதிராகத்தான் தீர்ப்பு அமைந்துள்ளது.
“(அண்மைய ஆண்டுகளில்) அரசுக்கு ஆதரவாக அளிக்கப்பட்டதைவிடவும் எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்புகள்தான் அதிகம் என்பேன்”.
என்றாலும், நீதிமன்றங்கள் சுதந்திரமாக செயல்படவில்லை என்ற எதிர்மறையான கருத்துத்தான் தொடர்ந்து நிலவுகிறது என்று குறிப்பிட்ட ஸாக்கி அதை மாற்றுவது கடினமாக உள்ளது என்றார்.
“இந்தப் பொதுவான கருத்தில் உண்மையில்லை. ஆனாலும், அக்கருத்தை மாற்றுவது கடினம்”.
ஆள்கொணர்வு விண்ணப்பங்களை, உயர்நீதிமன்ற அளவில், ஒரு மாதத்துக்குள்ளும் கூட்டரசு நீதிமன்றத்தில் இரண்டு வாரத்துக்குள்ளும் விசாரணை செய்ய வேண்டும் என்று நீதிமன்றங்களுக்கு தாம் உத்தரவிட்டதாகவும் ஸாக்கி கூறினார்.
சிலபல காரணங்களால், சில வழக்குகள் இழுத்துக்கொண்டே போகலாம். ஆனாலும் தாம் செய்த சீரமைப்புகளால் நிறைய முன்னேற்றம் காணப்பட்டுள்ளது என்றாரவர்.
“இப்போதெல்லாம் அவ்வழக்குகள் ஆறு மாதத்துக்குள் தீர்க்கப்படுகின்றன. முன்பு ஆள்கொணர்வு வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்க இரண்டு ஆண்டுகள்கூட ஆகும்”.
தாமதத்துக்குத் தடுப்புக் காவல் கைதிகளின் வழக்குரைஞர்களே காரணம்
அந்த வழக்குகள் இழுத்துக்கொண்டே போவதற்கு கைதிகளின் வழக்குரைஞர்கள்தான் பெரும்பாலும் காரணமாக இருப்பார்கள். அதனால், அரசுத்தரப்பில்தான் அடிக்கடி ஒத்திவைப்பு கேட்டு வழக்கைத் தாமதப்படுத்துகிறார்கள் என்ற பொதுவான கருத்தில் உண்மையில்லை.
“கூட்டரசு நீதிமன்றத்தில் என் முன்னிலையில் விசாரணைக்கு வந்த ஒரு வழக்கில்….15 முறை தள்ளிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. கேட்டுக்கொண்டவர் கைதியின் வழக்குரைஞர்தான்”.
பின்னர் வேறு விவகாரங்கள்மீது கவனத்தைத் திருப்பிய ஸாக்கி, ஓய்வுக்கால திட்டங்களில் ஒன்றாக நூல் எழுத அல்லது அரசாங்கம் எத்தனை வழக்குகளில் வென்றது எத்தனையில் தோற்றது என்று ஆய்வு செய்ய எண்ணியிருப்பதாகவும் கூறினார்.
“இதற்கு நீதிமன்ற ஆவணங்களைப் புரட்டிப் பார்க்க வேண்டியிருக்கும். அதற்கு தலைமை நீதிபதியின் அனுமதி பெற வேண்டும். நீதிமன்றங்கள் பற்றிய தப்பான கருத்தைப் போக்க இதைச் செய்வது நல்லது என்று நினைக்கிறேன்.
“அரசாங்கம் வென்ற வழக்குகளையும் தோற்ற வழக்குகளையும் கணக்கெடுத்தால் அரசுக்கு எதிராகத் தீர்ப்புக் கூறப்பட்ட வழக்குகள்தான் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்”, என்று ஸாக்கி கூறினார்.
நாளை: பேராக் அரசமைப்பு நெருக்கடி