லங்காட்2 -க்கு ஜார்ஜ் கெண்ட், கமூடா, லோ & லோ போட்டி?

அம்பாங் எல்ஆர்டி விரிவாக்கத் திட்டத்தில் சர்ச்சையில் சிக்கிக்கொண்டிருக்கும் ஜார்ஜ் கெண்ட் பெர்ஹாட், லங்காட்2 நீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் குத்தகையைப் பெற முயற்சி செய்யக்கூடும். அதனுடன் கமுடா பெர்ஹாட், லோ&லோ கார்ப்பரேசன் ஆகியவையும் போட்டியிடலாம் எனக் கருதப்படுகிறது.

ஜார்ஜ் கெண்ட், பகாங்கிலிருந்து சிலாங்கூருக்கு சுத்திகரிக்கப்படாத நீரைக் கொண்டுவரும் திட்டத்தில் ஏற்கனவே ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனமாகும் என்று கூறும் ஸ்டார் பிஸ், கமுடா அத்திட்டத்தில் ஈடுபாடு கொண்டிருந்தாலும் அதற்கு மிகப் பெரிய மை ரெப்பிட் ட்ரேன்சிட் திட்டம் கிடைத்திருப்பதாலும் எம்ஆர்டி2, எம்ஆர்டி3 ஆகியவற்றையும் அது குறி வைத்திருப்பதாலும் அது இந்தக் குத்தகையைப் பெற போட்டிபோடாது என்று குறிப்பிடுகிறது. அடையாளம் கூறப்படாத ஒரு வட்டாரத்தை மேற்கோள் காட்டி அது இவ்வாறு கூறியுள்ளது.

லங்காட்2 சுத்திகரிப்பு ஆலையையும் பகாங்-சிலாங்கூர் நீர் மாற்றுத் திட்டத்தையும் ஒரே நேரத்தில் கட்டுவதுதான் நல்லது என்று அவ்வட்டாரம் நினைக்கிறது.அப்போதுதான் கட்டுமான வேலைகள் முடிந்ததுமே பகாங்கிலிருந்து சுத்திகரிக்கப்படாத நீரைச்  சிலாங்கூருக்கு உடனே கொண்டுவர முடியும்.
 
லங்காட்2-க்கு நிலம் கிடைப்பதிலும் சிக்கல் உண்டாகலாம் என்று ஸ்டார் பிஸ் கருதுகிறது. சிலாங்கூரின் பக்காத்தான் ரக்யாட் அரசு சுத்திகரிப்பு ஆலைக்கு நிலம் கொடுக்க மறுக்கலாம்.

“நிலப் பிரச்னை தோன்றும். ஆலை அமைக்க நிலம் கிடைக்கவில்லை என்றால் சட்டத்துறைத் தலைவரால்கூட அதிகமாக எதுவும் செய்ய இயலாது”, என அவ்வட்டாரம் கூறியது.

ஸ்டார் பிஸ் தொடர்புகொண்ட கட்டுமானத் துறை ஆய்வாளர் ஒருவர், அத்திட்டம் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்ப்பதற்கு இல்லை என்றார்.

முதலில், மத்திய அரசும் மாநில அரசும் ஓர் உடன்பாட்டுக்கு வர வேண்டும். அதன்பின் மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால் இரண்டுமே முன்னெச்சரிக்கையுடனே எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடும்.