பேராசிரியரின் ஆய்வு அபத்தமானது என்கிறார் கெடா எம்பி

கெடா மந்திரி புசார் அசிசான் அப்துல் ரசாக், அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் கெடாவை பாஸிடமிருந்து கைப்பற்றும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறதென்று பேராசிரியர் ஒருவர் ஆய்வு  செய்து உரைத்திருப்பதை அபத்தம் என்று கூறியுள்ளார்.

தேசிய பேராசிரியர் மன்றம், பிஎன்னுக்கு ஆதரவாக உள்ள “பலவீனமான விவகாரங்களில்” மட்டுமே கவனம் செலுத்துவது ஏன் என்றும் அவர் வினவினார்.

கெடா மக்களின் அரசியல் விருப்பம் பற்றி ஆய்வு மேற்கொண்ட யுனிவர்சிடி உத்தாரா மலேசியா இணைப் பேராசிரியர் ரொஹானா யூசுப், ஆய்வின் முடிவை புதன்கிழமை தேசிய பேராசிரியர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கம் ஒன்றில் வெளியிட்டார்.

அம்மன்றம் அறிவுபூர்வமான விசயங்களில் துப்புரவான தேர்தல், ஆவி உறுப்பினர்கள் போன்ற விவகாரங்களில் கவனம் செலுத்துவது நல்லது என்று அசிசான் கூறினார்.

“மந்திரி புசாராகும் வாய்ப்புள்ளவர்கள் யார் என்று விவாதிக்கும் பிஎன் அடிநிலை தலைவர்கள்போல் பேராசிரியர்களின் சிந்தனையும் இருப்பது கண்டு ஏமாற்றம் கொள்கிறேன்”, என்றவர் கூறியதாக மலாய்மொழி நாளேடான சினார் ஹரியான் கூறியுள்ளது.

“அறிவுஜீவிகள் என்போர் கனமான விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும்”, என்று அசிசான் கூறினார்.