வரிநீக்கத்தால் புரோட்டோன், பெரோடுவா-வின் சாதகநிலை குறையாது

ஆட்சிக்கு வந்தால் கார்களுக்கான வரிகளை அகற்றும் பக்காத்தான் ரக்யாட்டின் திட்டத்தால் உள்ளூர் கார்களான புரோட்டோன், பெரோடுவா போன்றவற்றின் சாதகநிலை பறிபோகாது என்று பிகேஆர் கூறுகிறது.

வரிகள் அகற்றப்படுவதால் உள்ளூர் வாகனத் தொழில் அழிந்துபோகும் என்று கூறும் அம்னோ சகபாடிகளைச் சாடிய பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி, அவர்கள் வரிகள் பற்றி அறியாமல் பேசுகிறார்கள் என்றார்.

கலால் வரிக்கும் இறக்குமதி வரிக்குமிடையேயுள்ள வேறுபாடு அவர்களுக்குத் தெரியவில்லை என்று கூறிய ரபிஸி, கலால் வரி என்பது எல்லா கார்களுக்கும் விதிக்கப்படும் வரி,இறக்குமதி வரி என்பது இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு மட்டும் விதிக்கப்படுவது என்று விளக்கினார்.

“சில தரப்பினர் வரி சீரமைப்பு என்றால் புரோட்டோனின் விலையும் மற்ற(இறக்குமதி) கார்களின் விலையும் ஒரே மாதிரியாக இருக்கும் என்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்க முயல்கிறார்கள்.

“அது உண்மையல்ல.விலையால் புரோட்டோனும் பெரோடுவாவும் சாதகமான நிலையில்தான் இருக்கும்”.ரபிஸி இன்று பிகேஆர் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

கலால் வரி அகற்றப்பட்டால் உள்நாட்டுக் கார்களின் விலைகளும் வெளிநாட்டுக் கார்களின் விலைகளும் ஒரே அளவில்தான் குறையும் என்றவர் விளக்கினார்.

“எடுத்துக்காட்டுக்கு ரிம50,000-ரிம60,000-க்கு விற்கப்படும் உள்நாட்டுக் காருக்கு விதிக்கப்படும் 85விழுக்காட்டு வரியை நீக்கிவிட்டால் விலை ரிம30,000-க்கும் கீழே குறையும்.

“அப்போது புரோட்டோன் பெர்சனா அல்லது ஜென் 2 காரை ரிம27,000 அல்லது ரிம28,000-க்கு வாங்கலாம்.அதேபோல் ரிம80,000-க்கு விற்கப்படும் வெளிநாட்டுக் காரான ஹொண்டா-வின் விலை ரிம50,000-க்குக் குறையும்.

“வேறு வழி இல்லை என்பதால் குறைந்த வருவாய் பெறுவோரும் கார் வாங்க விரும்புகிறார்கள்.அப்படி வாங்கும்போது அவர்கள் குறைந்த விலையில் நம்பகமான காரையே வாங்க விரும்புவார்கள்.

“ஹொண்டா எக்கோர்ட் அல்லது ஹொண்டா சிட்டி வாங்கி ஒன்பது பத்து ஆண்டுகள் கடனில் சிக்கிக்கொள்ள நிச்சயம் விரும்ப மாட்டார்கள்”, என்றாரவர்.

கலால் வரி நீக்கத்தால் மாதத்துக்கு ரிம300-இலிருந்து ரிம400வரை மீதப்படும்.அது குடும்பங்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.

கேஎல்லுக்கு வெளியில் இருப்போருக்கும் கார் தேவை

வரி நீக்கத்தால் கார்களின் எண்ணிக்கை பெருகிவிடும் என்ற குறைகூறலுக்குப் பதிலளித்த ரபிஸி இவ்விவகாரத்தில் கிள்ளான் பள்ளத்தாக்கைத் தாண்டியும் எண்ணிப்பார்க்க வேண்டும் என்றார்.

கிள்ளான் பள்ளத்தாக்குக்கு அப்பால் வசிக்கும் 23மில்லியன் மலேசியரின் நலனையும் சீர்தூக்கிப்  பார்க்க வேண்டும்.

கார் விலைகளை உயர்வாக இருப்பது ஏன் என்றால் பொதுப்போக்குவரத்துச் சேவைக்கு நிதி உதவி செய்யத்தான் என்று காரணம் சொல்வதே வழக்கமாக போய்விட்டது.

“முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹ்மட் படாவி காலத்தில்கூட கார், பெட்ரோல் விலைகளை வைத்து பொதுப்போக்குவரத்தை மேம்படுத்தப் போவதாகக் கூறப்பட்டது ஆனால், அது நடக்கவில்லை”, என்று ரபிஸி கூறினார்.

எம்ஆர்டி திட்டம் உருவாக்க நிலையில் உள்ளது. அது 2017 அல்லது 2018-இல்தான் முழுமை பெறும்.அதற்கிடையில் குறைந்த வருவாய் பெறுவோருக்கும் போகவர வாகனம் தேவைப்படும்.

கார்கள் மீதான கலால் வரியை நீக்கினாலும் பொதுப்போக்குவத்தை மேம்படுத்த பக்காத்தான் உரிய கவனம் அளிக்கும் என்றும் ரபிஸி உறுதி கூறினார்.