பாடாங் செராய் எம்பி, என்.கோபாலகிருஷ்ணன், 2009-இல் ஒரு போலீஸ் அதிகாரி அவரது கடமையைச் செய்வதற்குத் தடையாக இருந்தார் என்ற வழக்கில் குற்றவாளி என்று நிறுவப்பட்டு அவருக்கு மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் ரிம5,000அபராதம் விதித்தது.அதைக் கட்டத் தவறினால் அவர் ஆறு மாதம் சிறை செல்ல வேண்டியிருக்கும்.
கோபாலகிருஷ்ணனுக்கு விதிக்கப்பட்ட அபராதம் எல்லாருக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும் என்று மெஜிஸ்ட்ரேட் முகம்மட் அஸ்ஹார் ஹம்சா கூறினார்.
2009 ஆகஸ்ட் 17-இல், புக்கிட் மெர்தாஜாமில் தேசிய இளைஞர் திறன்பயிற்சிக் கழகத்துக்குமுன் போலீஸ் அதிகாரி எம்.கருணாமூர்த்தி தம் கடமையைச் செய்வதற்கு கோபாலகிருஷ்ணன் இடையூறு செய்தார் என்று கூறப்பட்டது.
போலீசின் உத்தரவை மதிக்காமல் ஒரு ஒலிபெருக்கியை வைத்துக்கொண்டு போலீசாருக்கு சினமூட்டும் வகையில் அவர் பேசினாராம்.
ஏற்கனவே. 2010-இல், ஜார்ஜ்டவுன் மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இதேபோன்ற குற்றத்துக்காக கோபாலகிருஷ்ணனுக்கு ரிம1,000அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் மெஜிஸ்ட்ரேட் கூறினார்.
நீதிமன்றத்துக்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய கோபாலகிருஷ்ணன் தீர்ப்பை எதிர்த்து பினாங்கு உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்போவதாகத் தெரிவித்தார்.
கடந்த ஆண்டில் பிகேஆரைவிட்டு விலகி இப்போது ஒரு சுயேச்சை எம்பியாக உள்ள கோபாலகிருஷ்ணன், அரசுசாரா அமைப்பான பெகெமாஸ் வழி தம் தொகுதி மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்யப்போவதாகக் கூறினார்.
-பெர்னாமா