பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா பென்ஸ் எஸ்-கிளாஸ் கார் வைத்திருக்கிறார் என்று தாம் சொன்னதாகக் கூறப்படுவதை மறுத்த கெராக்கான் இளைஞர் தலைவர் லிம் சி பின், அவர் அந்தக் காரைப் பயன்படுத்துகிறார் என்றுதான் கூறியதாக விளக்கம் அளித்தார்.
“செப்டம்பர் 17-இல், பினாங்கில் கெராக்கான் மாநில இளைஞர் பேராளர் கூட்டத்தில் பேசியபோது தியான் சுவா ஒரு மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் பயன்படுத்துகிறார் என்றுதான் கூறினேன். அவர் ஒரு பென்ஸ் காருக்குச் சொந்தக்காரர் என்று கூறவில்லை”, என்று இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
என்றாலும் சுவாவின் இ-கிளாஸ் பென்ஸ் காரை எஸ்-கிளாள் என்று தவறுதலாகக் கூறியிருக்கலாம் என்பதை லிம் (இடம்) ஒப்புக்கொண்டார்.
“தியான் சுவா வைத்துள்ள இ-கிளாஸ் காரை எஸ்-கிளாஸ் பென்ஸ் கார் என்று சொல்லியிருந்தால் அதற்காக வருந்துகிறேன். அப்படிப்பட்ட தவறு திரும்பவும் நிகழாது”, என்றாரவர்.
24-மணி நேரத்துக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் அவதூறு வழக்கை எதிர்நோக்க நேரிடும் என்று தியான் சுவா நேற்று இறுதி எச்சரிக்கை விடுத்திருந்ததைத் தொடர்ந்து லிம்மின் அறிக்கை வந்துள்ளது.
ரிம8,000 சம்பளம் பெறும் தாம் ரிம800,000 பெறுமதியுள்ள காரை வைத்திருப்பதாகக் குத்திக்காட்டுவதன்வழி தம்மை ஒரு ஊழல் பேர்வழி என்று காட்ட முனைகிறார் லிம் என்று தியான் சுவா குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அப்படி ஒரு நோக்கம் தமக்குக் கிடையாது என்று லிம் மறுத்தார்.
“யாரும் முறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள், ஊழல் செய்கிறார்கள் என்று மறைமுகமாக குற்றம் சுமத்தும் எண்ணம் எனக்கில்லை.என் பேச்சில் பினாங்கின் நடப்பு அரசியல் பற்றிப் பேசினேனே தவிர தியான் சுவாவைச் சாடும் நோக்கில் பேசவில்லை”, என்று லிம் தெரிவித்தார்.