“தேவாலயம் இடிக்கப்பட்ட” வழக்கு: ஜோகூர்பாரு மாநகராட்சி மன்ற முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது

ஒராங் அஸ்லி தேவாலயம் ஒன்று இடிக்கப்பட்ட விவகாரம் மீது ஜோகூர்பாரு மாநகராட்சி மன்றம் (MBJB ) செய்து கொண்ட முறையீட்டை புத்ராஜெயாவில் முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நீதிபதி சையட் அகமட் ஹெல்மி சையட் அகமட் தலைமையில் கூடிய மூன்று நீதிபதிகளைக் கொண்ட குழு அந்த முடிவை ஏகமனதாக எடுத்துள்ளது.

நீதிபதி அப்துல் வஹாப் பட்டெய்ல், நீதிபதி அப்துல் அஜிஸ் அப்துல் ரஹிம் ஆகியோர் மற்றவர்கள் ஆவர்.

செலவுத் தொகையாக 10,000 ரிங்கிட் கொடுக்குமாறும் நீதிமன்றம் ஜோகூர்பாரு மாநகராட்சி மன்றத்திற்கு ஆணையிட்டது.

ஜோகூர் கோலா மாசாய்-யைச் சேர்ந்த காலிப் பாச்சிக், கெலா லா, மற்றும் 49 பேருடைய தேவாலயம் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு இழப்பீடு கொடுக்குமாறு ஜோகூர் பாரு உயர் நீதிமன்றம் 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அந்த நகராட்சி மன்றத்துக்கு ஆணையிட்டது.

ஜோகூர்பாரு மாநகராட்சி மன்றம், ஜோகூர் நில, சுரங்கத் துறை, ஒராங் அஸ்லி விவகாரத் துறை ஆகியவற்றுக்கு எதிராக காலிப் 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிவில் வழக்கு தொடர்ந்தார்.