தடுப்புக் காவலில் குணசேகரன் மரணமடைந்தது தொடர்பில் வழக்கு

ஆர்எஸ் குணசேகரன் தடுப்புக் காவலில் இருந்த போது மரணமடைந்தது தொடர்பில் சமர்பிக்கப்பட்ட வழக்கை ஆகஸ்ட் 30ம் தேதி வழக்கு நிர்வாகத்துக்கு தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் இன்று ஆணையிட்டுள்ளது.

காலஞ்சென்ற குணசேகரனுடைய சகோதரியான ஆர்எஸ் கங்கா கௌரி அந்த வழக்கை ஜுலை 13ம் தேதி தாக்கல் செய்திருந்தார்.

குணசேகரனைத் தாக்கியதாக சொல்லப்படும் போலீஸ் கார்ப்பரெல் முகமட் பைசால் மாட் தாயிப் உட்பட 12 பேரை அவர் அந்த வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார்.

பிரதிவாதிகளிடமிருந்து பொதுவான, சிறப்பான சேதங்களுக்கு அவர் இழப்பீடுகளையும் அவர் கோரியுள்ளார்.

முகமட் பைசால் உட்பட ஐந்து போலீஸ் அதிகாரிகளிள் குணசேகரனையும் மற்றும் மூவரையும் பிற்பகல் 3.00 மணி வாக்கில் கைது செய்ததாக கங்கா கௌரி தமது கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

போலீஸ் நிலையத்தைச் சென்றடைந்ததும் குணசேகரன் சிறுநீர் சோதனைக்கு தமது சிறு நீர் மாதிரியை வழங்க மறுத்துள்ளார். அதனால் அதே நாளன்று மாலை மணி 5.30 வாக்கில் முகமட் பைசால் குணசேகரனை குத்தியதுடன் உதைக்கவும் செய்தார் என்றும் அவர் கூறிக் கொண்டார்.

மற்ற போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் அது நிகழ்ந்துள்ளது என்றும் அவர்கள் அந்தத் தாக்குதலைத் தடுக்கவில்லை என்றும் அந்தத் தாக்குதலை குணசேகரனுடன் கைது செய்யப்பட்ட மூவரும் பார்த்தனர் என்றும் அவர் கூறிக் கொண்டார்.

குணசேகரன் மரணமடைந்ததைத் தொடர்ந்து இரண்டாவது பிரதிவாதியான ராஜிந்தர் சிங், குணசேகரனிடம் ஹெரோயின் இருந்ததாக போலீஸ் புகாரை செய்துள்ளார்.

திறந்த தீர்ப்பு

குணசேகரனுடய மரணம் தொடர்பான விவரங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரிடமிருந்து பெறப்பட்டதாகவும் கங்கா கௌரி சொன்னார்.

பிரதிவாதிகள் தங்கள் கடமையில் கவனக் குறைவாக நடந்து கொண்டதால் குணசேகரன் மரணமடைய நேரிட்டது என்றும் அவர் சொல்லிக் கொண்டார்.

குணசேகரனுடைய ‘மரணம் போதைப் பொருளுடன் தொடர்புடையது’ என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

குணசேகரனுடைய மரணம் மீது நடத்தப்பட்ட விசாரணையில் குரோனர் வழங்கிய திறந்த தீர்ப்பை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இம்மாதத் தொடக்கத்தில் நிலை நிறுத்தியது.

என்றாலும் முகமட் பைசால் குணசேகரனை தாக்கியதை அது ஏற்றுக் கொண்டது.