வியாழக்கிழமை தொடங்கி இந்தோனேசியாவின் சுமத்ராவில் பல இடங்களில் தீப் பற்றி எரிவதால் தீவகற்ப மலேசியாவின் பல இடங்களில் காற்றின் தரம் சீர்கெட்டிருக்கிறது.
சுமத்ராவில் திறந்த வெளிகளில் கட்டுப்பாடற்ற முறையில் காடுகள் எரிக்கப்படுவதும் தென்மேற்குக் காற்று வீசுவதும் தீவகற்ப மலேசியாவின் பல இடங்களில் குறிப்பாக போர்ட் கிள்ளான் பகுதியில் தூய்மைக்கேட்டை உருவாக்கியுள்ளது என சுற்றுப்புறத் துறை)டிஓஇ) நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தது.
நேற்றுக் காலை மணி 11-க்கு சிலாங்கூர் போர்ட் கிள்ளானில் காற்றுத்தூய்மைக் கேட்டு அளவு(ஏபிஐ) 118ஆக இருந்தது.
நாடு முழுவதுமுள்ள டிஓஇ-இன் 51 காற்றுத் தரக் கண்காணிப்பு மையங்களில் 31 இடங்களில் காற்றின் தரம் மிதமாக, 100க்கும் குறைவாக ஏபிஐ-இல் பதிவானது.சிலாங்கூரில் ஷா ஆலம், பந்திங், பினாங்கு, கெடா, கோலாலம்பூர், நெகிரி செம்பிலான், கிளந்தான்,திரெங்கானுவில் சில பகுதிகள், ஜோகூர் ஆகியவை அவற்றில் அடங்கும்.
16 இடங்களில் காற்றின் தரம் நல்ல நிலையில் உள்ளது.அங்கு காற்றின் தூய்மைக்கேட்டு அளவு 50-க்கும் குறைவாக இருந்தது.சாபா, சரவாக், திரெங்கானுவில் பாக்க, லாபுவான் முதலிய இடங்களில் அவ்வாறிருந்தது.
காற்றின் தூய்மைக் கேட்டைக் கருத்தில்கொண்டு சிலாங்கூர், கோலாலலம்பூர், புத்ரா ஜெயா,சரவாக் மிரியில் கோலா பாராம் ஆகியவற்றில் திறந்த வெளிகளில் எரியூட்டும் நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட தடை இன்னமும் அமலில் உள்ளது.
-பெர்னாமா