பாஸ்: ‘மலாய் நிலம் விற்கப்பட்டதை அம்னோ இளைஞர்கள் எதிர்ப்பார்களா ?”

பினாங்கு பாலிக் புலாவ்-வில் மலாய் சமூகத்துக்குச் சொந்தமான நிலத்தை கொழுத்த ஆதாயத்திற்கு விற்றதாக கூறப்படும் தனது இரண்டு தலைவர்களுக்கு எதிரான தனது நிலையை அம்னோ இளைஞர் பிரிவு அறிவிக்க வேண்டும் என பினாங்கு பாஸ் இளைஞர் பிரிவு சவால் விடுத்துள்ளது.

மலாய் சமூகத்தை அலட்சியம் செய்வதாக பினாங்கு அரசாங்கத்தை அடிக்கடி கடுமையாகக் குறை கூறி வரும் அம்னோ இளைஞர்கள் அம்னோ தலைவர்கள் செய்துள்ளதை ஏற்றுக் கொள்வார்களா என பினாங்கு மாநில பாஸ் இளைஞர் பிரிவின் சுற்றுச்சூழல், பயனீட்டாளர் விவகாரப் பிரிவின் துணைத் தலைவர் சுல் பாஹ்மி அபு பாக்கார் வினவினார்.

மலாய் உரிமைகளுக்காக தீவிரமாகப் போராடும் பினாங்கு அம்னோ இளைஞர் தலைவர் ஷேக் ஹுசேன் மைடின் தமது கட்சித் தலைவர்களுடைய ‘உண்மையான முகங்களை” காணத் தவறி விட்டாரா என சுல் பாஹ்மி கேள்வி எழுப்பினார்.

“கம்போங் தெராங்கில் மலாய் சமூகத்துக்குச் சொந்தமான நிலத்துக்கு அந்த இரண்டு அம்னோ தலைவர்களும் செய்ததை ஆட்சேபித்து அம்னோ இளைஞர் பிரிவும் பெர்க்காசா இளைஞர் பிரிவும் ஏன் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை ?”

“அவர்கள் உண்மையில் பினாங்கில் மலாய்க்காரர்களை பாதுகாக்கின்றார்களா அல்லது அம்னோவின் சேவகர்களாக இயங்குகின்றனரா ?” என சுல் பாஹ்மி மேலும் வினவினார்.

கம்போங் தெராங்கில் 31 கிராம மக்களுக்குச் சொந்தமான 9.4 ஏக்கர் நிலம் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 13.5 மில்லியன் ரிங்கிட்டுக்கு அல்லது ஒரு சதுர அடி 33 ரிங்கிட்டுக்கு விற்கப்பட்டுள்ளது பற்றியே அவர் குறிப்பிட்டார்.

மாநில அம்னோ துணைத் தலைவர் மூசா ஷேக் பாட்சிர், மாநில பிஎன் வியூகத் தலைவர் ஒமார் புவாட்ஸார் ஆகியோருக்குச் சொந்தமான மைசன் ஹைட் சென் பெர்ஹாட் ( Maison Height Sdn Bhd ) அந்த நிலத்தை முதலில் கிராம மக்களிடமிருந்து 8.6 மில்லியன் ரிங்கிட்டுக்கு வாங்கியது. பின்னர் அதனை Kay Pride Sdn Bhd என்ற தனியார் வீடமைப்பு நிறுவனத்துக்கு விற்றது.

மைசன் ஹைட்-டில் மூசாவுக்கு 500,000 ரிங்கிட் மதிப்புள்ள பங்குகளும் அதன் நிர்வாக இயக்குநரான ஒமாருக்கு 449,999 ரிங்கிட் மதிப்புள்ள பங்குகளும் ஒமார்-ன் சகோதரர் ஒமார் ஹருணுக்கு ஒரு ரிங்கிட் பங்கும் உள்ளன.
.
அந்த விஷயத்தை முதலில் பினாங்கு மாநிலச் சட்டமன்ற சபாநாயகரும் பிகேஆர் பாலிக் புலாவ் தொகுதித் தலைவருமான அப்துல் ஹாலிம் ஹுசேன் அம்பலப்படுத்தினார்.

கிராம மக்களிடமிருந்து நான்கே மாதங்களில் கொழுத்த ஆதாயத்தை அவர்கள் இருவரும் பெற்றதாகவும் அப்துல் ஹாலிம் குற்றம் சாட்டினார்.

அந்த விற்பனையை ஒப்புக் கொண்ட இருவரும் மாநில அரசாங்கம் தங்கள் நிறுவனத்தைக் கறுப்புப் பட்டியலில் சேர்த்து விட்டதால் தாங்கள் அந்த நிலத்தை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக கூறிக் கொண்டனர். அந்தக் குற்றச்சாட்டை முதலமைச்சர் லிம் குவான் எங் மறுத்துள்ளார்.

பினாங்கில் மலாய் உரிமைகளுக்கு அடிக்கடி போராடும் அம்னோ தலைவர்களுடைய நேர்மை குறித்தும் சுல் பாஹ்மி கேள்வி எழுப்பினார்.

“அம்னோ நேர்மையானதாக இருந்தால் அவர்கள் அதனைச் செய்திருக்க மாட்டார்கள். அந்த 5 மில்லியன் ரிங்கிட் கம்போங் தெராங்கைச் சேர்ந்த 31 மலாய்க்காரர்களுக்கு பயனளித்திருக்காதா ?”

“பல்கலைக்கழகக் கல்வியைப் பெறாத மலாய் கிராம மக்கள் கூட அந்த இரண்டு அம்னோ தலைவர்களும் அடைந்துள்ள 5 மில்லியன் ரிங்கிட் ஆதாயத்தில் ஏதோ குளறுபடி இருப்பதை உணருவர்,” என்றும் சுல் பாஹ்மி சொன்னார்.

வர்த்தகமும் துரோகமும்

அந்த குற்றச்சாட்டுக்களுக்கு உடனடியாகப் பதில் அளித்த ஷேக் ஹுசேன், “வர்த்தகம் பற்றி ஏதும் தெரியாததால்” பாஸ் இளைஞர் தலைவர்களுக்கு வர்த்தகத்துக்கும் துரோகத்திற்கும் இடையிலான வேறுபாடு புரியவில்லை என்றார்.

நிலத்தை விற்பதற்கு நில உரிமையாளர்கள் ஒப்புக் கொண்ட பின்னர் அந்த இரண்டு அம்னோ தலைவர்களும் வர்த்தகப் பரிவர்த்தனையை மேற்கொண்டதாக அவர் விளக்கினார்.

“மூசா-ஒமார் நிறுவனம் அந்த நிலத்தைச் சட்டம், இஸ்லாம் ஆகியவற்றின் அடிப்படையில் சட்டப்பூர்வமாக வாங்கியுள்ளது. அந்தப் பரிவத்தனையில் ஏமாற்று வேலை ஏதுமில்லை என்பது தான் மிகவும் முக்கியமானது,” அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் 13வது பொதுத் தேர்தலில் பிகேஆர் சார்பில் பாலிக் புலாவ்-வில் போட்டியிடுவதற்கு அப்துல் ஹாலிம் முயற்சி செய்வதால் அந்த விவகாரத்தை எழுப்பியுள்ளார் என்றும் ஷேக் ஹுசேன் சொன்னார்.

 

TAGS: