அன்வார் இப்ராஹிம் மீதான குதப்புணர்ச்சி வழக்கு 11 விசாரணையில் அவரைப் பிரதிநிதிக்கும் வழக்குரைஞர்கள் கடந்த வெள்ளிக் கிழமை நடத்திய பேட்டிக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும் எதிர்பாராத வகையில் ஆஜராகினர்.
என்றாலும் அந்த விசாரணை தொடருமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனெனில் பிரதிவாதித் தரப்பு இன்னும் ஆறும் சாட்சிகளை பேட்டி காண வேண்டும். அவர்களில் முன்னாள் ஐஜிபி மூசா ஹசானும் ஆடம்பர அடுக்கு மாடி வீட்டு உரிமையாளரான ஹசானுடின் அப்துல் ஹமிட்டின் இரண்டு முன்னாள் இந்தோனிசிய வீட்டுப் பணிப் பெண்களும் அடங்குவர்.
சுலியாத்தி, பித்ரியா டிபான் என்ற அந்த இரு பணிப் பெண்களும் இந்தோனிசியாவுக்குத் திரும்பி விட்டதாகவும் அவர்களை போலீஸார் இன்னும் கண்டு பிடிக்கவில்லை என்றும் புலனாய்வு அதிகாரி ஜுட் பெலேஷியஸ் பெரேரா கூறியதாக அன்வாருடைய வழக்குரைஞர்களில் ஒருவரான சங்கர நாயர் மலேசியாகினியிடம் கூறினார்.
“எஞ்சியுள்ள சாட்சிகளை தாங்கள் எப்போது வழங்க இயலும் என்பதை அரசு தரப்பு நாளை நீதிமன்றத்திடம் தெரிவிக்க வேண்டும்.”
எல்லா சாட்சிகளும் பிரதிவாதித் தரப்புக்கு வழங்கப்பட்டு பேட்டி காணப்படும் வரையில் அன்வருடைய எதிர்வாதம் தொடங்கக் கூடாது என்பதே நீதிமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஆகும். ஆகவே அவர்களை வழங்குவது அரசு தரப்பின் பொறுப்பாகும்,” என சங்கரா வலியுறுத்தினார்.
பிரதிவாதித் தரப்பு இது வரையில் 19 சாட்சிகளைப் பேட்டி கண்டுள்ளது. நஜிப், ரோஸ்மா, முன்னாள் மலாக்கா போலீஸ் படைத் தலைவர் முகமட் ரோட்வான் முகமட் யூசோப் ஆகியோரும் அடங்குவர்.