வரும் செப்டம்பர் 16ம் தேதி, 50வது மலேசிய தினக் கொண்டாட்டங்களை ஒட்டியும் எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலை ஒட்டியும் மலேசியா முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.
இந்த நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்துவ அமைப்புக்களின் பேராளர்களைக் கொண்ட இடைக்காலக் குழு ஒன்று கடந்த திங்கட்கிழமையன்று அதனை அறிவித்தது. அந்தக் குழுவில் மலேசிய தேவாலய மன்றம், தேசிய இவாஞ்சிலிஸ் கிறிஸ்துவ மன்றமும் சபா, சரவாக்கில் உள்ள கிறிஸ்துவ அமைப்புக்களும் அங்கம் பெற்றுள்ளன. அந்த வழிபாட்டுக்கு ‘ஐக்கிய பிரார்த்தனை’ என பெயரிடப்பட்டுள்ளது.
நாட்டுக்கும் தேவாலயங்களுக்கும் கூட்டாக பிரார்த்தனை செய்வதற்கு மலேசியாவில் உள்ள அனைத்து கிறிஸ்துவர்களையும் தேவாலயங்களையும் பிரார்த்தனை அமைப்புக்களையும் இணைப்பது அந்த நடவடிக்கையின் நோக்கம் என அந்தக் குழு விடுத்த அறிக்கை கூறியது.
“தேவாலயங்களுக்கு இடையில் ஒர் ஐக்கிய பிரார்த்தனை இயக்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு பிரார்த்தனைகளை ஒருமுகப்படுத்துவதும் கிறிஸ்துவர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதும் முதலாவது நோக்கமாகும்.”
“நாட்டையும் சமூகத்தையும் உருமாற்றம் செய்வதற்கு ஒன்றாக பிரார்த்தனை செய்யுமாறு தேவாலயங்களைக் கேட்டுக் கொள்வது இரண்டாவது நோக்கமாகும்.”
“குறிப்பாக 2012ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி தொடங்கும் மலேசிய தினக் கொண்டாட்டங்களும் எதிர்வரும் பொதுத் தேர்தலும் பிரார்த்தனைகளில் முக்கிய கவனத்தைப் பெறும்,” என்றும் அந்த அறிக்கை கூறியது.
கிறிஸ்துவர்கள் “எதிர்வரும் பொதுத் தேர்தல் அமைதியாகவும் நேர்மையாகவும் நடத்தப்படுவதற்கும் தேர்வு செய்யப்பட்டவர்கள் நாட்டின் உண்மையான நீண்ட கால நலனை மனதில் கொண்ட கௌரவமானவர்களாக இருப்பதற்கும்” பிரார்த்தனை செய்வர்.