முன்னாள் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் ராம்லி யூசோப்-புக்கு எதிராக அழைப்பாணைக் குற்றச்சாட்டு மீது முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்பித்த முறையீட்டை அரசு தரப்பு மீட்டுக் கொண்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து ராம்லி-க்கு ஒய்வூதியமும் ஒய்வுக் கொடையுமாக மொத்தம் 753,000 ரிங்கிட் கொடுப்பதற்கு அரசாங்கம் இணங்கியுள்ளது.
அவர் 2007ம் ஆண்டு இறுதி வாக்கில் ஒய்வு பெறுவதற்கு முன்னர் மூன்று மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டதால் அவருடைய ஒய்வூதியமும் ஒய்வுக் கொடையும் நிறுத்தி வைக்கப்பட்டன.
அரசு தரப்பு முறையீட்டை மீட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கும் ஜுலை 12ம் தேதியிடப்பட்ட கடிதம் தமக்குக் கிடைத்ததாக ராம்லி மலேசியாகினியிடம் கூறினார்.
“2007ம் ஆண்டு தொடக்கம் என் மீது தவறுதலாக சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுக்களில் இது கடைசியாகும்,” என்றார் அவர்.
“பாசிர் மாஸில் உள்ள என்னுடைய சொந்த ஊரான கம்போங் பூனுட் சூசு-வில் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுவதற்கு அந்த ஒய்வுக் கொடைப் பணத்தை பயன்படுத்துவதாக நான் வாக்குறுதி அளித்திருந்தேன். என் மீது குற்றம் சாட்டப்பட்ட பின்னர் எனக்கு ஏற்பட்ட களங்கம் துடைக்கப்பட வேண்டும் என்பதற்கான நான் அந்த வாக்குறுதியை வழங்கியிருந்தேன்,” என்றார் ராம்லி.