பாலா விவகாரத்தைத் ‘தீர்க்க’ துணை அமைச்சர் முன் வந்தார்

தற்போது இந்தியாவில் நாடு கடந்து வாழும் தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியம், குற்றம் சாட்டப்படுவதற்கு தயாராக இருந்து தமது முதலாவது சத்தியப் பிரமாணத்தை ஜோடித்த குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டால் அவர் தொடர்பான விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வர தற்போது துணை அமைச்சராகப் பணியாற்றும் ஒருவர் முன் வந்தார்.

அந்தத் துணை அமைச்சர் கடந்த ஆண்டு இரண்டு முறை-ஒரு முறை சிங்கப்பூரிலும் இரண்டாவது முறை கோலாலம்பூரிலும்-ரகசியமாக தம்மைச் சந்தித்ததாகவும் பாலசுப்ரமணியம் கூறிக் கொண்டார்.

அவர் ஒத்துழைத்தால் சாத்தியமான குறைந்த பட்ச அபராதம் அவருக்கு விதிக்கப்படுவதற்கு வகை செய்யவும் சிறைத்தண்டனையிலிருந்து விடுபடவும் துணை அமைச்சர் அப்போது வாக்குறுதி அளித்தார் என்றும் பாலசுப்ரமணியம் கூறிக் கொண்டார்.

“பிஎன் பாதுகாப்பாக இல்லை என அவர் ஒரு வேளை எண்ணியிருக்கலாம். நிலைமையை சீர்படுத்தி என்னுடைய விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வர அவர் எண்ணியிருக்கலாம்,” என பாலசுப்ரமணியம் கடந்த  மாதத் தொடக்கத்தில்  மலேசியாகினிக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார்.

“கடந்த ஆண்டு நிகழ்ந்த சரவாக் மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு தமக்கு கையூட்டுக் கொடுக்க இரண்டாவது முயற்சி மேற்கொள்ளப்பட்ட சில மாதங்களுக்குப் பின்னர் துணை அமைச்சர் அவ்வாறு முன் வந்தார்.”

மங்கோலியப் பிரஜையான அல்தான்துயா ஷாரிபு கொலை தொடர்பான சர்ச்சையில் பாலசுப்ரமணியம் முக்கியமான புள்ளி ஆவார்.

அவர் இரண்டு மாறுபட்ட சத்தியப் பிரமாணங்களை வெளியிட்ட பின்னர் தமது குடும்பத்துடன் அவர் இந்தியாவுக்கு ஒட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

தமது முதலாவது சத்தியப் பிரமாணம் ‘ கட்டாயத்தின் பேரில் ‘ கூறி இரண்டாவது சத்தியப் பிரமாணத்தில் கையெழுத்திடுமாறு மருட்டப்பட்டு பணமும் கொடுக்கப்பட்டதாக பாலசுப்ரமணியம் பின்னர் கூறிக் கொண்டார்.

2008ம் ஆண்டு அவர் தமது முதலாவது சத்தியப் பிரமாணத்தை வெளியிட்டார். அது அப்போதைய துணைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை அல்தான்துயா-வுடன் தொடர்புப்படுத்தியது.

அந்த மங்கோலிய மாது-வுடன் தமக்குத் தொடர்பு இருந்ததாக பாலசுப்ரமணியம் கூறியுள்ளதை நஜிப் மறுத்துள்ளார்.

அல்தான்துயா கொலைக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட அவரது அணுக்கமான நண்பரான அப்துல் ரசாக் பகிந்தா மீது குற்றம் சாட்டப்பட்ட போது சாட்சியமளிக்க அவர் அழைக்கப்படவில்லை.

அந்த வழக்கில் அப்துல் ரசாக் பகிந்தா விடுவிக்கப்பட்டார். நஜிப்பின் மெய்க்காவலர்களாக பணியாற்றியுள்ள சிறப்பு நடவடிக்கைப் பிரிவைச் சேர்ந்த இரண்டு போலீஸ்காரர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டனர்.

நஜிப் தற்காப்பு அமைச்சராக இருந்த போது பிரஞ்சு கப்பல் கட்டும் நிறுவனமான டிசிஎன்எஸ் மலேசியாவுக்கு இரண்டு ஸ்கார்ப்பின் ரக நீர்மூழ்கிகளை விற்கப்பட்டதுடன் அந்த மங்கோலிய மாது தொடர்புபடுத்தப்பட்டுள்ளார்.

அந்த விற்பனையின் போது சட்டவிரோதமாக கையூட்டுக்கள் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுவது மீது தற்போது பிரான்ஸில் நீதித் துறை விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.