ஆக்கோப் தமிழ்ப்பள்ளிக்கு மாற்று இடம் : சேவியர் ஜெயகுமார்

காப்பாரிலுள்ள ஆக்கோப் தமிழ்ப்பள்ளியில் நேற்று நடைபெற்ற இளந்தளிர் இதழ் அறிமுக நிகழ்வில் சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் கலந்து சிறப்பித்தார்.

அத்துடன் அந்நிகழ்வில் இளந்தளிர் இதழில் வெளிவந்த குறிப்புகளை கொண்டு நடத்தப்பட்ட அறிவு புதிர் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் எடுத்து வழங்கினார்.
 
அந்நிகழ்வில் பேசிய டாக்டர் ஜெயகுமார், ஏற்கெனவே மாநில அரசின் உதவியில் ஆக்கோப் தமிழ்ப்பள்ளியில் பாலர் பள்ளி கட்டப்பட்டதை நினைவுறுத்தினார்.

கல்வி மட்டுமே நம் சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வழியை கொண்டுள்ளது. ஆகையால் இப்பள்ளி மாணவர்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக பள்ளியை காப்பாருக்குப் பக்கத்திலேயே மாற்ற முயற்சிகள் முடுக்கிவிடப்படுமென டாக்டர் சேவியர் அறிவுறுத்தினார்.

அப்பள்ளியின் பள்ளி வாரியத் தலைவரான வழக்கறிஞர் திரு. கா.ஆறுமுகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் திரு.சூரியன் இப்பள்ளிக்கான மாற்று இடத்தை மாநில அரசு விரைவாக பெற்றுக் கொடுக்கும்படி வலியுறுத்தினார்.
 
மேலும் தமிழ்ப்பள்ளிகளுக்கும் தமிழ் மாணவர்களுக்கும் பல்வேறு வகையில் சேவையாற்றி வரும் தமிழ் அறவாரியம் மற்றும் சைல்ட் அமைப்புகளுக்கு நிதியுதவிகளையும் டாக்டர் சேவியர் நிகழ்வில் எடுத்து வழங்கினார்.

கடந்த 5 ஆண்டுகளாக தமிழ் அறவாரியம் நடத்தி வரும் அறிவியல் விழாவிற்காகவும் இளந்தளிர் இதழுக்குமான  ரி.ம 316,892-கான மாதிரி காசோலையை, அதன் தலைவர் வழக்கறிஞர் சி.பசுபதியிடம் வழங்கினார்.

மெதுவாக கற்கும் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தினை உருவாக்கியிருக்கும் சைல்ட் அமைப்பின் முயற்சிக்கு உதவும் வகையிலும் ரக்யாட் பாலர்பள்ளி நிர்வகிப்புக்குமான  ரி.ம. 194,000-ஐ அதன் தலைவர் டாக்டர் ஐங்கரனிடம் ஒப்படைத்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் சிலாங்கூர் மாநிலம் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 120 இலட்சம் வரவேற்கத்தக்க வகையிலான பரவலான தாக்கத்தை உண்டாக்கியுள்ளதாக இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த தமிழ்ப்பள்ளிகளுக்கான மாநாட்டில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.