3பக்காத்தான் மாநிலங்களில் மாற்றுக் கருப்பொருளில் தேசிய நாள் கொண்டாட்டம்

பக்காத்தான்  ஆளும் மூன்று மாநிலங்களில் -பினாங்கு, சிலாங்கூர்,கிளந்தான்-இவ்வாண்டு தேசிய நாள் கொண்டாட்டங்கள்   ‘Sebangsa, Senegara, Sejiwa’ (ஒரே தேசியம், ஒரே நாடு, ஒரே மூச்சு) என்ற அவற்றின் மாற்றுக் கருப்பொருளில் கொண்டாடப்படும் என்பதை பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் ஆயுப் உறுதிப்படுத்தினார்.

ஆனால், இன்னொரு பக்காத்தான் மாநிலமான கெடா, வேறொரு கருப்பொருளைக் கொண்டிருக்கும்-55 ஆம் ஆண்டு மெர்டேகா, தொடர்கிறது சேவை.

மாற்றுக் கருபொருளைப் பயன்படுத்துவதென மெர்டேகா கருப்பொருள் மீதான பக்காத்தான் குழு, மூன்று நாள்களுக்கு முன் முடிவு செய்ததாக சலாஹுடின் கூறினார் என மலாய் மொழி நாளேடு சினார் ஹரியான் கூறியுள்ளது.

“நாங்கள் முன்மொழிந்த கருப்பொருளையே தேசிய நாள் கொண்டாட்டத்துக்குப் பயன்படுத்துவோம்.கெடா மட்டும் வேறொரு கருப்பொருளை,55 ஆம் ஆண்டு மெர்டேகா, தொடர்கிறது சேவை என்னும் கருப்பொருளைக் கொண்டிருக்கும்”, என்றவர் கூறினார்.

கெடா ஆட்சிக்குழு அவ்வாறு தீர்மானித்தது என அதன் உறுப்பினர்களில் ஒருவரான அப்ட் கனி அஹ்மட் கூறினார்.

“கருப்பொருள் வேறுபட்டிருப்பதால் பிரச்னை இல்லை.தேசிய நாள் கொண்டாட்டத்தின்போது சமுதாயத்தில் நாட்டுப்பற்று நிறைந்திருக்க வேண்டும்.அதுதான் முக்கியம்”, என்று சலாஹுடின் குறிப்பிட்டார்.

பிஎன்னின் தேர்தல் பரப்புரை கருப்பொருளான ‘Janji Ditepati’ (வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன) என்பதே தேசிய நாள் கருப்பொருளாக இருப்பதை மாற்றுவதற்கு  தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சு மறுத்துவிட்டதை அடுத்து பக்காத்தான், மாற்றுக் கருப்பொருள் ஒன்றை உருவாக்க முனைந்தது.

அதற்கென தேசிய இலக்கியவாதி ஏ.சமட் சைட் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.அது 250பேர் அனுப்பி வைத்த கருப்பொருள் வாசகங்களிலிருந்து ஒன்றை இவ்வாண்டுக்கான கருப்பொருளாக தேர்ந்தெடுத்தது.