நோ ஒமார் இறால் பண்ணையின் ‘நில உரிமையாளர்’ மட்டுமல்ல

நில உரிமையாளரான நோ ஒமார் விவசாய, விவசாயம்-சார்ந்த தொழில் அமைச்சர் என்ற தம் பதவியைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்  என்று கூறி அதற்கெதிராக செகிஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் இங் சுவி லிம்மும் 100-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களும் சிலாங்கூர் தஞ்சோங் காராங்கில் உள்ள இறால் பண்ணைக்கு முன்புறம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சர் இதுகாறும் கூறிவந்ததுபோல் இறால் பண்ணை அமைந்துள்ள நிலத்துக்குச் சொந்தக்காரர் மட்டுமல்ல, அதற்கும் மேலாக அதில் தொழில்-பங்காளியும் ஆவார் என்பதற்கு புதிய ஆதாரத்தையும் இங் வெளியிட்டார்.

பிரிஸ்டின் எக்ரோஃபூட் சென்.பெர்ஹாட் இயக்குனர் சூ பாக் டெக் 2011 ஜனவரி 11-இல் எழுதிய உறுதிக் கடிதம்தான் அந்த ஆதாரம்  என்று கூறப்பட்டது.

“நிறுவனம் நோ ஒமாரின்(மைகார்ட் எண்,முகவரி) நிலத்தைக் கூட்டாக மேம்படுத்த ஒப்புக்கொள்கிறது.அதற்காக ஆண்டுக்கு ரிம25,200 கொடுக்கப்படும் எனவும் உத்தரவாதம் அளிக்கிறது.கூட்டுத்திட்டத்துக்கான ஒப்பந்தத்தின் பிரதி ஒன்றும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது”, என்றந்த கடிதம் கூறிற்று.

“கூட்டுத்திட்டம் செயல்பட குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகலாம், நிறுவனத்தின் நலன் கருதி நிலத்தின்மீது தனிப்பட்ட தடைக்கட்டு(கேவியட்) ஒன்றுக்கு விண்ணப்பம் செய்துகொள்ளப்படும்”.

அந்த கேவியட், குறிப்பிட்ட காலத்துக்கு நோ நிலத்தை விற்பதைத் தடுக்கிறது.

நோவுடன் சேர்ந்து கூட்டாக இறால் பண்ணை நடத்திவருவதாகக் கூறப்படுவதை சூ பாக் டெக் இதற்குமுன் மறுத்திருந்தார்.

குடியிருப்பாளர்கள் அதிருப்தி

நிலம் கிடைப்பது கடினமாகவுள்ளதே என்று மக்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்போது நோ,பண்ணைக்காக பாதுகாக்கப்பட்ட சதுப்புநிலக் காட்டுப்பகுதியிலிருந்து 12 ஹெக்டரை எளிதாகப் பெற்றிருக்கிறார் என்று இங் கூறினார்.இப்போது அப்பண்ணையின் பரப்பளவு 40 ஹெக்டருக்கும் அதிகமாகும்.

“நோ(இடம்), இறால் சாப்பிடலாம்.ஆனால், இறால் வளர்க்கக்கூடாது.அது அதிகார அத்துமீறல்.(சிலாங்கூர்)மந்திரி புசாராக விரும்பும் அம்மனிதர் இதற்குப் பதில் சொல்ல முன்வர வேண்டும்”, என்று இங் கூறினார்.

பண்ணை  மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அதன் குளங்களைக் கழுவுகிறது என்றும் கழுவிய நீர் கடலுக்குள் விடப்படுகிறது என்றும் அவர் சொன்னார்.

அங்குள்ள குடியிருப்பாளர்கள் கழிவுநீரில் அபாயமிக்க இராசயனங்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.தங்களின் மீன்பிடிப்பு குறைந்து போனதற்கு அதுதான் காரணம் என்றும் குறைகூறுகிறார்கள்.

இங், ஜூலை 12-இல், சட்டமன்றக் கூட்டத்தில் நோ-வுக்கும் தஞ்சோங் காராங் அம்னோ தொகுதிக்கும் இறால் பண்ணைக்குமுள்ள தொடர்பை முதன்முதலாக அம்பலப்படுத்தினார்.