இணைய சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் எனக் கூறப்பட்டுள்ள ஆதாரச் சட்டத்தின் 114ஏ பிரிவு அறிமுகம் செய்யப்படுவதற்கு எதிரான இயக்கத்தின் ஒரு பகுதியாக சிஐஜே என்ற சுதந்திர இதழியல் மய்யம் அடுத்த செவ்வாய்க்கிழமை இணைய இருட்டடிப்பு தினத்தை அனுசரிக்கும்.
இணையத்தில் கருத்துக்களை வெளியிடுவது மீது அந்தத் திருத்தம் ஏற்படுத்தக் கூடிய பாதகமான தாக்கம் குறித்து இணையப் பயனாளிகளிடையே விழிப்புணர்வை தோற்றுவிப்பதும் அந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
இவ்வாறு அந்த மய்யத்தின் நிர்வாக அதிகாரி மாஸ்ஜாலிசா ஹம்சா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் ஏப்ரல் மாதம் கூடிய போது அவசரமாக நிறைவேற்றப்பட்டு ஜுலை 31ம் தேதி அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்பட்ட அந்தத் திருத்தத்தை மீட்டுக் கொள்ளுமாறு இணையப் பயனாளிகள் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
“அந்தத் திருத்தம் மீது வழக்குரைஞர்களும் போராளிகளும் இணைய அடிப்படை வணிகர்களும் உட்பட பல தரப்புக்கள் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளனர். எந்த இணைய உள்ளடக்கத்திற்கும் வேறு வகையாக நிரூபிக்கப்பட்டால் தவிர அதற்கு இணையப் பயனாளியே வெளியீட்டாளராகக் கருதப்படுவதற்கு அந்தப் பிரிவு வகை செய்கின்றது.”
“இணைய சமூகத்திற்கு வலைப்பதிவுகள், கருத்தரங்குகள், உபசரணைச் சேவைகள் ஆகியவற்றுக்கு இடமளிக்கும் அல்லது நிர்வாகம் செய்யும் தனிநபர்களும் வெளியிடப்படும் உள்ளடக்கத்துக்கு பொறுப்பேற்க வேண்டியிருக்கும். குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படும் வரையில் நிரபராதி என்ற அடிப்படைக் கோட்பாட்டுக்கு எதிராகவும் அது அமைந்துள்ளது,” என்றும் அவர் சொன்னார்.
அந்தத் திருத்தம் இணைய பயனாளிகளையும் இணையக் கருத்துக்களுக்கு இடம் அளிக்கும் இணையத் தளங்களையும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவச Wi-Fi வசதிகளை வழங்கும் நிறுவனங்களையும் பாதிக்கும் என்று மாஸ்ஜாலிசா தெரிவித்தார்.
இணையத்தின் வழி தேசத் துரோகம், மோசடி, அவதூறு ஆகிய குற்றங்களைச் செய்கின்றவர்களைக் கைது செய்வதற்கும் குற்றம் சாட்டுவதற்கும் இப்போது 1997ம் ஆண்டு கணினி குற்றங்கள் சட்டம், 1948ம் ஆண்டு தேசத் துரோகச் சட்டம், 1957ம் ஆண்டு அவதூறுச் சட்டம், 1998ம் ஆண்டு தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் 233வது பிரிவு ஆகியவை உட்பட பல நடப்புச் சட்டங்கள் இருந்த போதிலும் அந்தப் புதிய திருத்தமும் இயற்றப்பட்டுள்ளது.
மற்ற வழிகளில் சாட்சியங்களை போலீசார் பெற முடியும் போது 114ஏ பிரிவு திருத்தத்தைக் கொண்டு வந்து இணையத் தளச் சேவைகளை வழங்கும் அமைப்புக்களை பொறுப்பேற்குமாறு செய்வதற்கு அவசியமே இல்லை என மனித உரிமை வழக்குரைஞர் எட்மண்ட் போன் சொன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இணைய ஊடக சுதந்திரத்தை அந்தப் பிரிவு கட்டுப்படுத்துவதால் அது ரத்துச் செய்யப்பட வேண்டும் என பக்காத்தான் ராக்யாட் எம்பி-க்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அமெரிக்கா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இணைய சுதந்திரத்தை ஆதரித்து இணைய இருட்டடிப்பு தினம் அனுசரிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு மலேசியாவிலும் அவ்வாறு செய்ய முடிவு செய்யப்பட்டதாக மாஸ்ஜாலிசா மேலும் கூறினார்.