போலீஸ் படையில் உள்ள ஆண்களும் பெண்களும் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தால் துரோகிகளாகவும் நன்றி மறந்தவர்களாகவும் கருதப்படலாம் என அஞ்சுவதாக கூறப்படுவதை PBPM என்ற முன்னாள் போலீஸ்காரர்கள் சங்கம் மறுத்துள்ளது.
தேர்தல்களில் போலீசாரும் இராணுவத்தினரும் பிஎன் -னுக்கு வாக்களிப்பதற்கு தங்களது சம்பளங்கள் குறைக்கப்படும் என்ற அச்சம் காரணமல்ல. மாறாக தங்கள் நலன்களை பிஎன் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையே காரணம் என PBPM தலைவர் ஷாபி பாக்ரி கூறியதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
அமைதியையும் பாதுகாப்பையும் முன்னேற்றத்தையும், பொருளாதார வளர்ச்சியையும் பிஎன் கொண்டு வந்துள்ளதால் அதன் மீது பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.
“ஆகவே நாங்கள் கடைமைப்பட்டுள்ளோம் அல்லது தேர்தலின் போது நாங்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தால் துரோகிகளாகக் கருதப்படலாம் என்ற கேள்வியே எழவில்லை,” என ஷாபி சொன்னார்.
போலீஸ் படையில் ஆளும் கட்சிகள் குறித்த அச்சமும் நன்றி உணர்வும் நிலவுவதாக முன்னாள் புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுப் பிரிவு இயக்குநர் பாவ்சி ஷாரி மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளதற்கு ஷாபி பதில் அளித்தார்.
கடந்த மே மாதம் பாஸ் கட்சியில் பாவ்சி இணைந்த போது அதனை “அரசாங்கத்துக்கு எதிரான துரோகச் செயல்” என ஷாபி வருணித்தார்.
பாவ்சி-யின் நடவடிக்கை பல முன்னாள் போலீஸ் அதிகாரிகளை காயப்படுத்தியுள்ளதாகவும் ஷாபி சொன்னார்.
நீல சீருடையில் உள்ளவர்கள் தேர்தலின் போது எந்தக் கட்சிக்கும் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுள்ளதாக ஷாபி வலியுறுத்தினார் என்றும் பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
“எதிர்க்கட்சிகளை சிறிய பிரிவினரே ஆதரிக்கின்றனர். ஆளும் கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு நாங்கள் அவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது. என்றாலும் PBPM தலைவர் என்ற முறையில் நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்பதால் தவறான தேர்வைச் செய்ய வேண்டாம் என நான் உறுப்பினர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் PBPM-க்கு 100,000 உறுப்பினர்கள் உள்ளனர்.