அழிக்க முடியாத மையைப் பயன்படுத்துவதை ஆசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஆதரிக்கிறது

உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள பரிந்துரைகளுக்கு ஏற்ப இருக்குமானல் கை விரலில் அழிக்க முடியாத அந்த மையை போடுவதால் ஆரோக்கியத்திற்கு எந்தக் கேடும் விளையாது என ஆசிய தேர்தல்களை கண்காணிக்கும் சுதந்திரமான தேர்தல்களுக்கான ஆசிய கட்டமைப்பு கூறுகிறது.

அழிக்க முடியாத அந்த மையின் முக்கிய கலப்புப் பொருளான சில்வர் நைட்டிரேட், மொத்த அளவில் நான்கு விழுக்காட்டுக்கு மேல் போகக் கூடாது என்பது அதன் அர்த்தமாகும்.

மலேசியாகினிக்கு அளித்த மின் அஞ்சல் பேட்டியில் அந்தக் கட்டமைப்பின் அதிகாரி இச்சால் சுப்ராயாடி கூறினார்.

செயற்கையான சில்வர்  நைட்டிரேட் நான்கு  விழுக்காட்டுக்கு மேல் அதிகமாக இருந்தால் நரம்பு மண்டலத்துக்கு தீங்கை ஏற்படுத்தும் என்பதால் அவ்வாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அரிப்பு ஏற்படக் கூடிய சாத்தியத்தைக் குறைக்கும் என்பதால் சில நாடுகள் இயற்கை வளங்களிலிருந்து பெறப்பட்ட சில்வர்  நைட்டிரேட் பயன்படுத்தப்பட வேண்டும் என சில நாடுகள் வற்புறுத்தியுள்ளன என அவர் சொன்னார்.

“இந்தோனிசியாவில் பயன்படுத்தப்படும் அழிக்க முடியாத மையில் 4 விழுக்காட்டுக்கும் குறைவாகவே சில்வர்  நைட்டிரேட் உள்ளது. அதன் தயாரிப்பு கடுமையாகக் கண்காணிக்கப்படுகிறது. இயற்கையாக அல்லது மூலிகைகளிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்களே அங்கு பயன்படுத்தப்படுகிறது.”

இயற்கையாகப் பெறப்படும் சில்வர்  நைட்டிரேட் சரும அரிப்பை ஏற்படுத்தாது. மலேசிய விஞ்ஞானிகள் அந்த நாட்டில் நிர்ணயிக்கப்பட்ட விதிகளுக்கு ஏற்ப அதனைத் தயாரிக்க முடியும் என நான் நம்புகிறேன்.”

“உலகில் அழிக்க முடியாத மையை அதிகம் தயாரிக்கும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் முக்கியமானவை. அதிக விலை கொடுக்க வேண்டியிருப்பதால் பல நாடுகள் சொந்தமாக அந்த மையை இப்போது தயாரிக்கத் தொடங்கியுள்ளன,” என்றும் இச்சால் சொன்னார்.

அந்த மையை உள்நாட்டில் தயாரித்தால் அதனை உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப குறிப்பாக சமய கட்டுப்பாடுகளுக்கு இணங்க உருவாக்க இயலும்.

என்றாலும் அந்த மையின் தரம் கடுமையாக கண்காணிக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், தயாரிப்பாளர்கள் விரைவாக ஆதாயம் அடைவதற்காக குறுக்கு வழிகளை நாடக் கூடும் என்றார் அவர்.

“அழிக்க முடியாத மை என்பது நல்ல தொழில். 2009ம் ஆண்டு இந்தோனிசிய அதிபர் தேர்தலில் 574,945 வாக்குச் சாவடிகளுக்காக 1,1149,890 போத்தல் அழிக்க முடியாத மை வாங்கப்பட்டது. அதன் மொத்த மதிப்பு 2.7 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்,” என்றார் அவர்.

கோளாறு நிகழாது என முழுமையாகச் சொல்ல முடியாது

அழிக்க முடியாத மையை அழுக்கு நீக்கிகளைக் கொண்டு எளிதாக அழித்து விட முடியும் என கடந்த வாரம் ஐரோப்பிய நிறுவனம் ஒன்று செய்து காட்டியிருப்பதாக கடந்த வாரம் தி ஸ்டார் நாளேடு தகவல் வெளியிட்டது.

உடல் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அந்த மை தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அடையாளம் தெரிவிக்கப்படாத அந்த நிறுவனத்தின் பேச்சாளர் சொன்னார்.

அங்கு அந்த மை பயன்படுத்தப்படாததற்கு வாக்காளர் பட்டியல் மீது பொது மக்கள் நம்பிக்கை உயர்வாக இருப்பதும் தேர்தல் அதிகாரிகளின் நடுநிலைப் போக்கும் காரணங்கள் என இச்சால் சொன்னார்.

“ஒருவர் பல முறை வாக்களிப்பதைத் தடுப்பதற்காக பல நாடுகள் அழிக்க முடியாத மையைப் பயன்படுத்துகின்றன. வாக்காளர் பட்டியல் மீதும் தேர்தல் அதிகாரிகள் மீதும் நம்பிக்கை குறைவாக இருப்பதால் அழிக்க முடியாத மை பயன்படுத்தப்படுகிறது.”

அந்த மையைப் பயன்படுத்துவதால் மோசடிகளை முற்றாகத் தவிர்த்து விடலாம் என்றோ, குளறுபடிகள் இருக்காது என்றோ கருதக் கூடாது என்றும் இச்சால் குறிப்பிட்டார்.

“வாக்களிப்பு நடைமுறையை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு அழிக்கமுடியாத மை பெரிதும் உதவும். என்றாலும் தேர்தல் அதிகாரிகள் தொழில் ரீதியாக நடந்து கொள்வதும் முக்கியமாகும்.”

“தேர்தல் அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டால் பல முறை வாக்களிப்பை நல்ல, பாதுகாப்பான மை கூட தடுக்க முடியாது. ஆகவே தேர்தலுடைய புனிதத் தன்மையை நிலைநிறுத்த பார்வையாளர்கள் இருப்பது அவசியமாகும்.”

பாங்காக்கைத் தளமாகக் கொண்ட சுதந்திரமான தேர்தல்களுக்கான ஆசிய கட்டமைப்பு 1997ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. தேர்தல்களில் அழிக்க முடியாத மை பயன்படுத்தப்படும் ஆப்கானிஸ்தான், இந்தியா, இந்தோனிசியா உட்பட பல நாடுகளில் அந்த அமைப்பு தேர்தல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளது.