குடியிருப்பாளர்கள்:ஸபாஷ் சொல்வது தவறு; நீர் தட்டுப்பாடு இல்லை

ஸ்ரீபெட்டாலிங்கில் பல குடியிருப்பாளர்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கும் தண்ணீர் பிரச்னைக்கு ஷிரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூர் (ஸபாஷ்) கூறுவதுபோல் நீர்தட்டுப்பாடு காரணமல்ல,குறைந்த நீர் அழுத்தமே காரணம்.

ஸ்ரீபெட்டாலிங்கில் ஜாலான் வான் எம்போக், ஜாலான் வான் எம்போக்1,ஜாலான் வான் எம்போக் 2 ஆகிய சாலைகளில் உள்ள மொத்தம் 404வீடுகளில் கடந்த ஈராண்டுகளாக குறைந்த நீர் அழுத்தம் நிலவுவதாக ஸ்ரீபெட்டாலிங் குடியிருப்பாளர்கள் சங்கத் தலைவர் டான் தை தோங் கூறினார்.

“நீர்தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஸ்ரீபெட்டாலிங்கும் ஒன்று என ஸபாஷ் தப்பான அறிக்கைகள் வெளியிட்டு வருவதைக் கண்டு ஏமாற்றம் அடைகிறோம்”, என டான் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

ஸ்ரீபெட்டாலிங் பகுதியே குறைந்த நீர் அழுத்தத்தால்  பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறுவதும் தவறு என்றாரவர்.

“அந்த மூன்று சாலைகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ளவர்களுக்குத் தடையின்றி தண்ணீர் கிடைத்து வருகிறது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம்”, என்று டான் குறிப்பிட்டார்.

ஜூன் 18, த ஸ்டார் செய்தியொன்று, செமின்யி, லங்காட் நீர்தேக்கங்களில் நீரின் அளவு குறைந்திருப்பதால் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படலாம் என்று ஸ்பாஷ் கூறியதாக தெரிவித்திருந்தது.

ஜாலான் கிளாங் லாமா,ஸ்ரீபெட்டாலிங், டேசா பெட்டாலிங், பெட்டாலிங் மாவட்டத்தில் செக்‌ஷன் 52-இன் பல பகுதிகள், செர்டாங் மாவட்டதில் ஐஓஐ செர்டாங் முதலிய பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும் அந்த அறிக்கை கூறியது.

ஆனால், ஜாலான் வான் எம்போக்1,ஜாலான் வான் எம்போக் 2 சாலைகளில் வசிப்போருக்கு நீர்விநியோகத் தடை என்பது அன்றாடப் பிரச்னையாகி விட்டது என்றார் டான்.

“ஒவ்வொரு நாளும் மாலை 5மணிக்கு முன்னதாகவே நீரைச் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.மாலை மணி 5க்கும் இரவு மணி 7-க்குமிடையில்தான் எப்போதும் (நீர் வருவது)தடைப்படும்.நள்ளிரவுக்குப் பின்னர் மீண்டும் வரும்.

“சில நேரங்களில் பின்னிரவு மணி 2-க்குத்தான் நீர் வரத் தொடங்கும்.அதுவரை காத்திருந்து நீரைப் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்”, என்றாரவர்.

நிறைய புகார்கள் செய்யப்பட்டுள்ளன

இது பற்றி பலர் ஸபாஷுக்கு புகார் செய்திருக்கிறார்கள்.அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட விளக்கங்களை நினைத்தால்தான் “சிரிப்பு வருகிறது” என்றாரவர். “தண்ணீர் குழாய்கள் தரம் உயர்த்தப்படவில்லை.நீர் அழுத்தம் உயர்ந்தால் குழாய்கள் வெடித்துவிடும்” என்றெல்லாம் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. 

கடந்த வாரம் ஜாலான் வான் எம்போக்கில் காலியாகவுள்ள ஒரு வீட்டில் தீ பற்றிக் கொண்டது.குறைந்த நீர் அழுத்தம் காரணமாக தீயை அணைப்பதற்கு இரண்டு மணி நேரத்துக்கு மேலானது.

“தீயணைப்புப் படையினர் சுங்கை பிசியிலிருந்து 15நிமிடங்களில் வந்து சேர்ந்து விட்டனர்.தீயணைப்பு வீரர்கள் அவர்கள் வாகனத்தில் உள்ள நீரை முதலில் பயன்படுத்தினார்கள்.அது போதவில்லை.

“அதன்பின்னர் பெருங்குழாயிலிருந்து (hydrant) நீர் எடுக்க முயன்றனர். குறைந்த நீர் அழுத்தத்தின் காரணமாக அது வேலை செய்யவில்லை. அதனால், உதவிக்கு மேலும் இரண்டு தீயணைப்பு வண்டிகளை அழைக்க வேண்டியதாயிற்று”, என்று டான் கூறினார்.

தாங்கள் தொடர்ச்சியாக எதிர்நோக்கும் தண்ணீர் பிரச்னைக்கு ஸபாஷ் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று குடியிருப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதற்குக் காலக்கெடு ஒன்று நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.