சபா ஆர்சிஐ தலைவராக முன்னாள் போர்னியோ தலைமை நீதிபதி நியமனம்

சபாவில் சட்ட விரோதக் குடியேற்றக்காரர் பிரச்னையை ஆய்வு செய்யும் ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்துக்கு முன்னாள் போர்னியோ தலைமை நீதிபதி ஸ்டீவ் சிம் தலைமை தாங்குவார் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று அறிவித்துள்ளார்.

சபா மலேசியப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் கமாருஸாமான் அம்போன், முன்னாள் சபா சட்டத் துறைத் தலைவர் ஹெர்மான் லுப்பிங், முன்னாள் சபா மாநிலச் செயலாளர் கேஒய் முஸ்தாபா, மலேசிய  குற்றத் தடுப்பு அற நிறுவன முன்னாள் உதவித் தலைவர் ஹென்ரி சின் ஆகியோர் மற்ற குழு உறுப்பினர்கள் ஆவர்.

சபாவில் இன்று பிற்பகல் உள்ளூர் பிஎன் தலைவர்களைச் சந்தித்த போது பிரதமர் அதனை அறிவித்தார் என கோத்தா பெலுட் எம்பி அப்துல் ரஹ்மான் டாஹ்லான் கூறினார்.

“பிஎன் தலைவர்கள் வழியாக நான் மக்களுடைய விருப்பங்களைச் செவிமடுத்தேன். அதனால் நான் ஆர்சிஐ-யை அமைத்துள்ளேன். அனைத்து சபா பிஎன் தலைவர்களும் அது அமைக்கப்படுவதை விரும்பினர் என நஜிப் சொன்னார்,” என டிவிட்டர் பதிவில் அப்துல் ரஹ்மான் குறிப்பிட்டார்

பெர்சே 3.0 பேரணியை விசாரிப்பதற்காக கடந்த மே மாதம் அரசாங்கம் முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் ஹனீப் ஒமார் தலைமையில் அமைத்த குழுவில் ஒர் உறுப்பினராக ஸ்டீவ் சிம் அறிவிக்கப்பட்டார்.

ஆனால் அவர் உடல் நலக் குறைவைக் காரணம் காட்டி அந்த நியமனத்தை இடைவழியில் நிராகரித்து விட்டார்.