அரசாங்கம் 2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் போது நாட்டின் கடன்களைக் குறைப்பதில் கவனம் செலுத்தும். அதே வேளையில் வரவு செலவுத் திட்டம் மக்களுக்கு உதவுவதோடு பொருளாதாரத்துக்கு ஊக்கமூட்டுவதாகவும் அது இருக்கும்.
இவ்வாறு இரண்டாவது நிதி அமைச்சர் அகமட் ஹுஸ்னி ஹானாட்ஸா கூறுகிறார். நாட்டின் தற்போதைய கடன் அளவு மொத்த உள்நாட்டு உறபத்தியில் 53 விழுக்காடு ஆகும்.
“நாட்டின் கடனைக் குறைப்பதற்கான வழிகளை நாம் இப்போது பரிசீலித்து வருகிறோம். எங்களிடம் பல வழிகள் உள்ளன. நாங்கள் அவற்றை ஆய்வு செய்கிறோம்.”
“நாம் கடன்களைக் குறைக்க முடியுமானால் நிர்ணயிக்கப்பட்ட செலவினங்களையும் குறைக்க இயலும் என்பதே அதன் பொருளாகும்,” என அகமட் ஹுஸ்னி ஈப்போவில் கூறினார்.
அவர் ‘ஆதரவற்ற குழந்தைகளுடன் பொருட்களை’ வாங்கிய பின்னர் நிருபர்களிடம் பேசினார்.
நடைமுறைச் செலவுகளையும் மேம்பாட்டுச் செலவுகளையும் உள்ளடக்கிய 2013ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை அரசாங்கம் இப்போது தயாரித்து வருவதாக அவர் சொன்னார்.
“நமது மேம்பாட்டுச் செலவுகள் ஏற்கனவே 10வது மலேசியத் திட்டத்தில் குறிக்கப்பட்டு விட்டன. நாம் மொத்தம் 49 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளோம். அது நிர்ணயிக்கப்பட்டு விட்டது. நாம் இப்போது பரிசீலித்துக் கொண்டிருப்பது நடைமுறைச் செலவுகளாகும்.”
ஒய்வூதியம், சம்பளம், கடன் ஆகியவை போன்ற நிர்ணயிக்கப்பட்ட செலவுகள் அதில் சம்பந்தப்பட்டுள்ளதால் நடைமுறைச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என அகமட் ஹுஸ்னி சொன்னார்.
“நாங்கள் 2013 வரவு செலவுத் திட்டத்தின் முதல் நகலைத் தயாரித்து விட்டோம். நாங்கள் இப்போது அதனை புதுப்பித்துக் கொண்டிருக்கிறோம். வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்படுவதற்கு முன்னர் சில நாட்கள் வரை நாங்கள் அதனைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டிருப்போம்.”
“2013 வரவு செலவுத் திட்டம் மக்களுக்கு உதவுவதோடு பொருளாதாரத்துக்கும் ஊக்கமூட்ட வேண்டும் என நாங்கள் விரும்புவதால் எங்களுக்கு கிடைத்த கருத்துக்களை ஆய்வு செய்து அவற்றையும் இணைத்து வருகிறோம்,” என்றார் அவர்.
செப்டம்பர் மாதம் 28ம் தேதி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நாடாளுமன்றத்தில் 2013ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்வார்.
பெர்னாமா