பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும், மிரட்டல் விடக்கூடாது. ‘’கார்’’ எனப்படும் மத்திய மின்சார மாற்ற அமலாக்க திட்டத்தை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம் என்று சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், அத்திட்டம் ஒரு சாரரின் வர்தக நலன் சார்ந்த விவகாரமாக மட்டுமல்லாது, அங்கு வாழும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு, சுபிட்சம் மற்றும் நலன் சார்ந்த விவகாரமாக இருப்பதால் பலர் மாநில அரசுடன் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், சுங்கை தெரந்தாங் குடியிருப்பாளர்கள் மற்றும் தெனகா நேஷனல் அதிகாரிகளும் இந்த விவாதங்களில் ஈடுப்பட வேண்டியுள்ளது என்று அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“ஒரு பொறுப்பான மாநில அரசாக நான், அனைத்து தரப்பினர்களின் நலன்களையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியுள்ளது. தெனகா நேஷனலை போன்று வெறும் வர்த்தக நலனை மட்டும் கவனத்தில் எடுத்துக்கொள்ள முடியாது. பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டு வரும் அனைத்து தரப்பினரும் அவரவர் கடட்பாட்டை உணர்ந்து நாட்டின் நலனையும் கருத்தில் கொண்டு செயல் படவேண்டும்”, என்றாரவர்.
“அனைவரும் தொடர்ந்து பொறுப்புணர்வுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு வருவார்கள். விவகாரத்தை எவரும் அரசியலாக்க அனுமதிக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம். சிலாங்கூர் மாநில அரசு மத்திய மின்சார மாற்று அமலாக்க வளாகம் குறித்த விவகாரத்தில் அதிக சிரத்தையுடன் நடந்து வருகிறது. சிறிது காலதாமதமாகலாம், ஆனால் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் சிறந்த ஒரு தீர்வை தேடுவதில் நாம் ஆர்வம் காட்டி வருகிறோம்”, என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் காலிட் இப்ராஹிம் கூறியுள்ளார்.