அம்னோ மற்றும் பாரிசான் தலைவர்கள் சிலரது கட்சித்தாவலை “பெரும்புள்ளிகளின் வெளியேற்றம்” என்று வருணித்திருப்பதன்வழி மாற்றரசுக் கட்சி மக்களை ஏமாற்றப் பார்க்கிறது என்கிறார் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின்.
வெளியேறிய தலைவர்கள் பாரிசான் நேசனலுக்கு வேண்டப்படாதவர்களே என்றாரவர்.
சனிக்கிழமை இரவு அம்னோவைவிட்டு விலகி பாஸில் சேர்ந்த தம்ரின் கப்பார்(படத்தில் இடம் இருப்பவர்) பற்றிக் குறிப்பிட்ட கைரி, தம்ரின் நீண்டகாலமாகவே அம்னோ அரசியலைவிட்டு ஒதுங்கி இருந்தவர் என்றும் அவரைத் திரும்ப அரசியலுக்கு இழுத்து வந்து அதைக் கட்சித் தாவல் என்கிறார்கள் என்றார்.
“மாற்றுதரப்பு-ஆதரவு ஊடகங்கள் இதைப் பெரிய விவகாரமாகக் காண்பிக்க முயல்கின்றன.ஆனால், அது அப்படிப்பட்ட ஒன்றில்லை.
“வில்ப்ரட் பும்புரிங், துவாரான் மக்களுக்குப் பிடிக்காதவர் ஆகிவிட்டார். லாஜிம்(உக்கின்)-முக்கும் கட்சியில் இப்போது செல்வாக்கு இல்லை.
“எங்கள் தரப்பினர் அவர்கள் தரப்புக்குத் தாவினால்,அவர்களுக்கு எங்களைப் பிடிக்காமல் போய்விட்டது, மக்கள் நலன் கருதி மாறினார்கள் என்றெல்லாம் அன்வார்(இப்ராகிம்)அள்ளிவிடுவார்.அவர்கள் தரப்பைச் சேர்ந்தவர்கள் கட்சித் தாவினால் மட்டும் காசு கொடுத்து வாங்கி விட்டோம் என்பார்.
“இப்பொய்களைக் கேட்டுக் கேட்டு சலித்துவிட்டது.மக்களின் புத்திசாலித்தனத்தை அவமதிக்காதீர்கள்”, என்று கோலாலம்பூரில் செய்தியாளர்கள் கூட்டமொன்றில் கைரி கூறினார்.
செனட்டர் மைஜோல் மஹாப், பிஎன்னிலிருந்தும் உப்கோ-விலிருந்தும் விலகுவார் என்பதைப் பல வாரங்களுக்கு முன்பே அம்னோ அறியும், ஆனால் “அன்வார், அதை மக்களுக்கு அதிர்ச்சிதரும் ஒரு செய்திபோலக் காண்பிக்க முயன்றார்”, என்றவர் சொன்னார்..
“அதுதான் அன்வாரின் தந்திரம்.ஆனால் அவர்(மைஜோல்) பல வாரங்களுக்கு முன்பே உப்கோவிலிருந்து விலகி விட்டார்”, என்று கைரி கூறினார்.
கட்சித் தாவலைத் தடுக்கவும் கட்சித்தாவ விரும்பும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவுமுன்னர் நாடாளுமன்ற இடத்தைக் காலி செய்ய வேண்டும் என்றும் சட்டம் கொண்டு வருவதுகூட நல்லதுதான் என்று கைரி கூறினார்.