நொடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உயர் போலீஸ் அதிகாரிக்கு எச்சரிக்கை

2002-இல் போலீஸ் காவலில் இருந்தபோது நிகழ்ந்த ஆர்.சுந்தர்ராஜூவின் மரணத்துக்கு அரசாங்கம் இழப்பீடு கொடுக்கத் தவறிவிட்டது என்பதால் ஓர் உயர்போலீஸ் அதிகாரிமீது நொடிப்பு(bankruptcy) நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக அவரின் குடும்பத்தார் எச்சரித்துள்ளனர்.

சுந்தர்ராஜு கிள்ளான் போலீஸ் நிலைய லாக்-அப்பில் இருந்தபோது, கூடவே இருந்த ஒன்பது கைதிகளால் தாக்கப்படுவதை போலீசார் தடுக்கத் தவறிவிட்டனர் என்பதால் அவரது இறப்புக்கு போலீசின் கவனக் குறைவே காரணம் என்று 2010இல் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

அத்தாக்குதலில் தலைக்கும் உடலுக்கும் ஏற்பட்ட காயங்களால் சுந்தர்ராஜு கோமாவில் விழுந்து விட்டார். மூன்று நாள்களுக்குப் பின்னர் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் உயிரிழந்தார்.

தாக்கிய கைதிகள் ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு நான்கிலிருந்து ஏழாண்டுகள்வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

“அந்த ஒன்பது பேரும்… தண்டனை முடிந்து சுதந்திர மனிதர்களாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். தடுத்து வைக்கப்பட்டிருந்தவரின் மரணத்துக்கு அரசாங்கமே பொறுப்பு என்று தீர்ப்பளிக்கப்பட்டிருந்தாலும் அரசு இழப்பீடு கொடுக்க மறுக்கிறது”, என அக்குடும்பத்தின் வழக்குரைஞர் எம்.மனோகரன் கூறினார். வழக்கு தொடங்கியதிலிருந்து அவர்தான் அவர்களின் வழக்குரைஞராக இருக்கிறார்.

இழப்பீடு தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில் எதிர்வாதிகளாக நால்வர் குறிப்பிடப்பட்டனர்- அப்போதைய கிள்ளான் ஒசிபிடி-ஆக இருந்த ஏ.பரமசிவம், சிலாங்கூர் போலீஸ் தலைவர் அலுவலகம், தேசிய போலீஸ் படைத் தலைவர் அலுவலகம் மற்றும் அரசாங்கம்.

பரமசிவம் தவிர்த்து மற்ற மூன்றும் அரசாங்க அமைப்புகள் என்பதால் அவற்றுக்கு எதிராக நொடிப்பு நடவடிக்கை மேற்கொள்ள இயலாது என்பதை மனோகரன்(படத்தில் இடக்கோடியில் இருப்பவர்) சுட்டிக்காட்டினார்.

எனவே, சுந்தர்ராஜுவின் குடும்பத்தார்,பரமசிவம் மீது நொடிப்பு நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்றாரவர். உயர் நீதிமன்ற நீதிபதி ஹர்மிந்தர் சிங் டாலிவால் எழுத்துப்பூர்வமான தீர்ப்பில் பரமசிவத்துக்கு “சம பொறுப்பு,இன்னும் சொல்லப்போனால் கிள்ளான் ஒசிபிடி என்பதால் கூடுதல் பொறுப்பு உண்டு” எனக் குறிப்பிட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

நீதிமன்றம் இழப்பீடாக ரிம237,000வழங்க உத்தரவிட்டிருந்தது.இப்போது அத்தொகை செலவு, வட்டி முதலியவற்றையும் சேர்த்து ரிம311,706.85ஆக உயர்ந்துள்ளது.

பணம் கோரி ஆகஸ்ட் 7-இல், பரமசிவத்துக்கு அறிவிக்கை அனுப்பப்பட்டது.14 நாள்களுக்குள் அவர் பதில் அளிக்கவில்லை என்றால் அவருக்கு எதிராக நொடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரமசிவம் அதன்பின் மூத்த உயர் ஆணையராக பதவி உயர்வு பெற்று இப்போது புக்கிட் அமானில் உதவி இயக்குனர்(பயிற்சி,தேர்வு) பொறுப்பு வகிக்கிறார்.

மக்களின் வரிப்பணம் சம்பந்தப்பட்டது

“ மக்களின் வரிப்பணத்திலிருந்து அரசாங்கம் இழப்பீட்டுத் தொகையைக் கொடுக்க வேண்டியிருக்கும்.அதைக் கொடுப்பதற்குத் தாமதமானால் வட்டி கூடும்.இதனால் வரிச் செலுத்துவோருக்குத்தான் சுமை அதிகரிக்கும்”, என்று மனோகரன் கூறினார்.

உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அரசாங்கம் மேல்முறையீடு செய்தது. ஆனால் ஜூன் 26-இல் அது தள்ளுபடி செய்யப்பட்டது.

“கூட்டரசு நீதிமன்றத்திடமும் முறையிட முடியாது.அதற்கான காலம் கடந்துவிட்டது.இனி, பணம் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை”, என்றாரவர்.

சரக்கு உந்து ஒன்றில்  பணியாளராக வேலை பார்த்த சுந்தர்ராஜு,32, அவரின் மனைவி எம்.லதா குடும்பத் தகராறு பற்றி புகார் செய்ததால் 2002 நவம்பர் 11இல் கைது செய்யப்பட்டு கிள்ளான் போலீஸ் நிலைய லாக்-அப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.அங்குதான் அவர் மரணமுற்றார்.

அவரது மரணத்தைத் தொடர்ந்து அவரின் மனைவி போலீசுக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக வழக்கு தொடர்ந்தார்.ஆனால், அவரும் 2009-இல் புற்று நோயால் காலமானார்.

அதன்பின் சுந்தர்ராஜுவின் தாயார் முத்தம்மாளும் அவரின் சகோதரர் டி தர்மராஜனும் வாதிகளாக வழக்கை எடுத்து நடத்துகின்றனர்.