அம்பிகா: “நான் பிரதமரானால்…!”

பெர்சே இணைத் தலைவர் அம்பிகா சீனிவாசன் மலேசியாவின் பிரதமரானால் நாட்டு மக்களிடையே ஒற்றுமை, ஊழல் ஒழிப்பு மற்றும் போலீஸ் படை, சட்டத்துறை போன்ற பல்வேறு அரசுத்துறைகளைப் புதுமைப்படுத்துதல் போன்ற மூன்று விவகாரங்களுக்கு முன்னுரிமை அளிப்பேன் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 12) கூறினார்.

மலேசியாவின் நான்கு தமிழ் நாளிதழ்களின் ஆசிரியர்களுக்கும் அம்பிகாவுக்கும் இடையில் நடந்த ஒரு கேள்வி-பதில் நிகழ்வில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்குப் பதிலாக அவர் இவ்வாறு கூறினார்.

மலேசிய தமிழ் நாளிதழ்களின் ஆசிரியர்களும் – தமிழ் நேசன், மலேசிய நண்பன், மக்கள் ஓசை மற்றும் தினக்குரல் – அம்பிகாவும் பங்கேற்ற “Dato’ Ambiga Sreenevasan & Media” என்ற நிகழ்ச்சியை செம்பருத்தி.கொம் ஆதரவில் மலேசிய இந்திய அரசு சார்பற்ற அமைப்புகள் கூட்டணி ஏற்பாடு செய்திருந்தது.

ஷா அலாம், மிட்லேண்ட்ஸ் மாநாட்டு மையத்தில் ஆகஸ்ட் 12, மாலை மணி 7.30 க்கு தொடங்கிய இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 1,500 க்கும் மேற்பட்டவர்களை இக்கூட்டணியின் செயலாளர் ஜி. குணராஜ் “தொடாதே, தொட்டால் விடாதே என்ற போராளி அம்பிகா” என்று கூறி அனைவரையும் வரவேற்றார்.

அம்பிகாவுடன் தமிழ் நாளிதழ்களின் ஆசிரியர்கள் கே.பத்மநாதன் (தமிழ் நேசன்), எம்.எஸ்.மலையாண்டி (மலேசிய நண்பன்), எம். ராஜன் (மக்கள் ஓசை) மற்றும் பி.ஆர்.ராஜன் (தினக்குரல்) ஆகியோரும் இருந்தனர்.

நல்ல அறிகுறி

ஆடல் பாடல்களுடன் விருந்தும் அளிக்கப்பட்டது. ஏராளமான பெண்களும் இளைஞர்களும் இந்நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டது ஏதோ நல்லது நடக்கப் போகிறது என்பதற்கு இது ஒரு தெளிவான அறிகுறி என்று அங்கிருந்தவர்களில் பலர் பேசிக்கொண்டனர்.

கலை நிகழ்ச்சிகளுக்கும் விருந்துக்கும் இடையில் செம்பருத்தி.கொம் சில முக்கிய சமூகத் தலைவர்களுடன் நடத்தியிருந்த பேட்டிகளின் பதிவாக்கம் ஒளிபரப்பப்பட்டது. இதுவும் ஒரு சிறந்த அம்சமாக கருதப்பட்டது.

அம்பிகாவும் (தமிழ்) ஊடகங்களும் என்ற நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து உரையாற்றிய மலேசியாவின் மிகப் பெரிய தமிழ்ப்பள்ளியான கிள்ளான், சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரான க. உதயசூரியன் இது ஒரு வரலாற்றுப்பூர்வமான நிகழ்ச்சி: தமிழ் நாளிதழ்களின் ஆசிரியர்கள் ஒருங்கே திரண்டு இங்கு கூடியிருப்பது ஒரு வரலாறு படைக்கும் நிகழ்ச்சி என்று கூறினார்.

2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனை என்று கூறிய உதயசூரியன், “அத்தேர்தல் மத்திய அரசாங்கம் மக்களின் நலன் மற்றும் மக்களிடையே ஒற்றுமை ஆகியவற்றின் மீது ஈடுபாடு காட்ட வேண்டியதின் கட்டாயத்தை வெளிப்படையாக காட்டிற்று”, என்றார்.

மக்களும் அரசாங்கமும் விழிப்புடன் செயல்பட வேண்டியதை அவர்களுக்கு நினைவுறுத்த வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு என்பதை வலியுறுத்திய உதயசூரியன், “தமிழ் நாளிதழ்கள் மக்கள் ஒற்றுமையுடன், சம உரிமைகளுடன் வாழ்வதற்கு அவற்றின் பங்களிப்பைத் தொடர வேண்டும்”, என்று கேட்டுக்கொண்டார்.

என்றும் மூன்றாம் தரம்தானா?

மிட்லேண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் திரளாகக் கூடியிருந்த மக்களுடன் மக்களவையின் உறுப்பினர்களான சார்ல்ஸ் சந்தியாகோ, எம். மனோகரன், மேலவை உறுப்பினர் எஸ். இராமகிருஷ்ணன், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார், நெகிரி செம்பினான் சட்டமன்ற உறுப்பினர் ஜி. குணா ஆகியோரும் இருந்தனர்.

தமிழ் அறவாரியத்தின் தலைவர் சி.பசுபதி, சைல்ட் தலைவர் ஐயங்கரன், நியட் தலைவர் தஸ்லிம் இப்ராகிம், மிபாஸ் தலைவர் சிவகுமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

உதிரத்தையும் உடலையும் உரமாகத் தந்து இந்நாட்டை வளமாக்கிய இந்தியர்கள் மூன்றாம் தரத்தினராக்கப்பட்டிருக்கின்றனர். வியர்வை சிந்தாமல் நாட்டை கொள்ளையடித்துக் கொண்டிருப்பவர்கள் முதல் தரத்தினர். இது வருத்தத்திற்குரிய விவகாரமாகும் என்று இந்நிகழ்சி ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் கா.ஆறுமுகம் அவரது அறிமுக உரையில் கூறினார்.

நாட்டின் தலைமைத்துவம் ஒருதலைப்பட்சமாக இருந்து வருகிறது. “இதனை மாற்ற அரசியல் மாற்றம் என்பது கட்டாயமாகிறது” என்பதை சுவாராம் என்ற மனித உரிமை கழகத்தின் தலைவருமான ஆறுமுகம் வலியுறுத்தினார்.

“பிறக்கும் ஒவ்வொரு இந்திய குழந்தையும் முதியவராகி இறக்கும் வரையில் அது சிறுபான்மை இன இந்தியராகவே இருக்க  வேண்டுமா?

“மலேசியர் என்ற உரிமையுடன் நாட்டின் வளத்தைப் பங்கிட்டு வாழ இயலாமல் மூன்றாம் தர குடிமக்களாக, கடனாளியாக, குறைந்த சம்பள குப்பைத் தொழிலாளியாக வாழ்வதுதான் நியதியா?

“நாம் இந்த வளங்கள் நிறைந்த பணக்கார நாட்டில்  இந்தியர்கள் என்பதாலே வஞ்சிக்கப்படுகிறோம், ஏமாற்றப்படுகிறோம்,” என்று ஆறுமுகம் கூறினார்.

பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் வளத்தைக் கொள்ளையடித்து தமதாக்கிக்கொள்வதற்காக இந்திய வாக்காளர்களுக்கு பிச்சை போட்டு அவர்களின் வாக்குகளை வாங்குகிறார்கள். அரிசி பொட்டலங்களை வீசி எறிந்து இந்தியர்களின் வாக்குகளைத் திரட்டுகிறார்கள். அதற்குத் துணைபோகும் இந்தியர்களும் உண்டு என்று சாடிய ஆறுமுகம், “தேர்தலில் நமது வாக்குகளை விற்பனை செய்வது நாம் நமது எதிர்கால சந்ததியினருக்குச் செய்யும் மன்னிக்க முடியாத, மன்னிக்கக்கூடாத மாபெரும் துரோகமாகும்” என்று மேலும் கூறினார்.

சட்டத்தின் ஆளுமை

தமிழ் நாளிதழ்களின் ஆசிரியர்கள் முன்வைத்த 12 கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கு முன்னர் மலேசிய அரசமைப்புச் சட்டத்தின் சட்ட ஆளுமையின் தன்மை மற்றும் அதில் வரையறுக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் குறித்து அம்பிகா ஒரு சிற்றுரையை நிகழ்த்தினார்.

ஆட்சி சட்ட ஆளுமைக்கு உட்பட்டிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய அம்பிகா,  வேண்டியவாறு சட்டத்தை இயற்றி நடத்தப்படும் ஆட்சி ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்றார்.

சட்ட ஆளுமையில்தான் மனித உரிமைகள் நிலைநிறுத்தப்படும். ஆகவே, மக்கள் சட்ட ஆளுமையில் மிகுந்த ஈடுபாடுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மலேசியர்கள் தயாராகி விட்டனர்

இரு கட்சி அரசியல் முறைக்கு மலேசியர்கள் தயாரா என்ற கேள்விக்கு, மலேசியர்கள் கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போதே இரு கட்சி அரசியல் முறைக்குத் தயாராகி விட்டனர் என்றார் அம்பிகா. ஏன் இரு கட்சி முறை மட்டும்? இன்னும் பல கட்சிகளும் இருக்கலாம் என்று அவர் மேலும் கூறினார்.

தேவை இனவாத அரசியல் தலைமைத்துவம் அல்ல

இந்திய அரசியல் தலைமைத்துவத்தில் வெற்றிடம் இருக்கிறது. அதனை இதர இன அரசியல் தலைமைத்துவத்திலும் காணலாம். ஆனால், தேவைப்படுவது இனவாத அரசியல் தலைமைத்துவம் அல்ல என்று இந்திய அரசியல் தலைமைத்துவத்தில் வெற்றிடம் இருக்கிறது. அது குறித்து அவரின் கருத்து என்ன என்ற கேள்விக்கு இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

அரசியல் ஆசையா?

மலேசிய மக்களின் இதயத்தில் இடம்பிடித்துள்ள அம்பிகாவுக்கு அரசியல் நாட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு, இல்லவே இல்லை என்றார். பெர்சே மேற்கொண்ட தூய தேர்தல் போராட்டத்தை வெற்றியடையச் செய்வதே தமது ஒரே கடப்பாடு என்று தமது நிலைப்பாட்டை அம்பிகா தெளிவுபடுத்தினார்.

கட்சி மாறிகள்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவதைத் தடுக்க நீதிமன்ற நடவடிக்கை எடுக்க முடியுமா?

இன்று அமலில் இருக்கும் சட்டத்தின்கீழ் இதனைத் தடுத்த நிறுத்த முடியாது. இது சட்டப்படி குற்றமல்ல. ஆனால், இது நெறியற்ற செயல். கட்சி மாற விரும்பும் பிரதிநிதி தமது பதவியைத் துறக்க வேண்டும். தற்போதையச் சட்டத்தின்கீழ் அவ்வாறு செய்தால், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட இயலாது. ஆகவே, இச்சட்டம் திருத்தப்பட வேண்டும் என்றார் அம்பிகா.

பயனற்ற மருட்டல்கள்

பெர்சே 3.0 பேரணிக்குப் பின்னர் பல்வேறு தரப்பினரிடமிருந்து அவருக்கு விடுக்கப்பட்ட பல்வேறு விதமான மருட்டல்களால் [ நயவஞ்சகர் நஜிப்கூட அம்பிகா இஸ்லாத்திற்கு மிரட்டலாக இருக்கிறார் என்று கூறியிருந்ததும் அடங்கும் – ஆர்] அம்பிகா கலக்கமடைந்தாரா?

தமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் கொடூரமானவை, மனிதத் தன்மையற்றவை, நேர்மையற்றவை என்று கூறிய அம்பிகா, இவை அச்சத்தை ஏற்படுத்தினாலும் அவற்றால் தாம் துவண்டுவிடவில்லை என்றார்.

தம்மை மட்டும் வேறுபடுத்தி தாக்கியதற்கான ஒரே காரணம்: “நான் ஓர் இந்து, இந்தியர், பெண்.” இவர்களின் இந்த இனவாத தாக்குதல்களுக்கு இவர்களே இரையானார்கள் என்றாரவர்.

இச்சம்பவம் மலேசிய மக்கள் அனைவரும் இன வெறியர்கள் அல்லர் என்பதைத் தெளிவாக்கியது. “அனைத்து இனத்தவர்களும் என் இல்லத்திற்கு வந்து இந்த இழியவர்களின் செயலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு எனக்கு ஆதரவும் வாழ்த்தும் தெரிவித்தனர்”, என்று அம்பிகா பதில் அளித்தார்.

ஏன் வன்முறை?

இந்தியர்களிடையே காணப்படும் வன்முறைகள், போதைப் பொருள்களில் காட்டப்படும் ஆர்வம், மேம்பாடடைய வேண்டும் என்பதில் ஈடுபாடின்மை, மொத்தத்தில் சோர்ந்து நிற்கும் நிலைமை போன்றவற்றுக்கு பெரும்பாலான இந்தியர்களின் வறுமைதான் காரணம். நேர்மையான முறையில் வருமானம் தேடுவதற்கான வாய்ப்புகள் இல்லாததால் இந்நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கான பொறுப்பு இந்திய தலைவர்களைச் சாரும். நாம் அனைவரும் இந்நாட்டு குடிமக்கள். நாம் நமது உரிமைகள் படிப்படியாக சீரழிக்கப்படுவதை அனுமதிக்கக்கூடாது என்று இந்தியர்களின் தற்போதைய நிலைமைக்கான முக்கிய காரணம் என்ன என்ற கேள்விக்கு பதில் அளித்தார்.

பிரதமரானால்?

இந்நாட்டின் பிரதமரானால் அவர் முன்னுரிமை அளிக்க விரும்பும் மூன்று நடவடிக்கைகள் பற்றி கூறுமாறு அம்பிகா கேட்டுக்கொள்ளப்பட்டார்.

முதலாவதாக, தமக்கு பிரதமராகும் எண்ணம் ஏதும் கிடையாது என்று அவர் பதில் அளித்தார்.

ஆனால், பிரதமர் என்ற முறையில் நாட்டை இன்று சீரழிக்கும் மூன்று முக்கிய விவகாரங்களான தேசிய ஒற்றுமை, ஊழல் ஒழிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்துவதோடு போலீஸ், சட்டத்துறை தலைவர் அலுவலகம் போன்ற முக்கியமான அரசுத்துறைகளைப் புதுமைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றாரவர்.

தேர்தல் காலங்களில் பொட்டலங்கள் வழங்குவது?

பொதுத் தேர்தல் நடக்கவிருக்கும் காலத்தில் மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள், மானியங்கள் மற்றும் வாக்குறுதிகள் வழங்குவது தேர்தல் சட்டத்திற்கு முரணானதா?

இவை எதற்காக தேர்தல் காலத்தில் செய்யப்படுகின்றன என்பது புரியாத ஒன்றல்ல. ஆனால், அரசாங்கம் என்ற முறையில் இவற்றை மக்களுக்காக செய்வதாக விளக்கம் அளிக்கப்படுகிறது. போலீஸ் புகார் செய்யலாம். செய்யலாம் அவ்வளவுதான்.

இது போன்ற நடவடிக்கைகள் அனைத்தும் வாக்குகளை வாங்குவதற்குத்தான். இவற்றை நிறுத்துவதற்கு வலுவான, சுயேட்சையான தேர்தல் ஆணையம் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை அம்பிகா சுட்டிக் காட்டினார். தேர்தல் சீர்திருத்தங்களுக்கான நமது போராட்டம் தொடர வேண்டும் என்றாரவர்.

மே கலவரமா, அது என்ன?

பெர்சே இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் அவருக்கு திருப்தி அளித்துள்ளனவா என்று கேள்விக்கு ஆணித்தரமாக “ஆம்” என்று அம்பிகா பதில் அளித்தார்.

தூய்மையான, நியாயமான தேர்தல் நடத்துவதற்கான சீர்திருத்தங்கள் வேண்டும் என்ற பெர்சேயின் கோரிக்கையைத் தட்டிக்கழிக்க அரசாங்கம் என்னென்னவோ செய்து பார்த்தது. இறுதியில், வேறுவழி இல்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட அரசாங்கம் தேர்தல் சீர்திருத்தங்களை வரைவதற்காக    நாடாளுமன்ற சிறப்புக்குழுவை அமைத்தது. இது பெர்சேயின் பெரும் வெற்றியாகும் என்று அம்பிகா பதில் அளித்தார்.

பெர்சே முன்மொழிந்த எட்டு கோரிக்கைகளில் ஒன்றரைதான் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது பெரும் குறைதான். ஆனால், போராட்டம் தொடரும் என்று அம்பிகா உறுதியாகக் கூறினார்.

பெர்சே இயக்கத்தின் போராட்டத்திற்கு முன்பு மக்களிடம் அச்ச மனப்பாங்கு இருந்தது. மே 13 கலவரம் மீண்டும் வரும் என்ற அச்சுறுத்தலால் தயங்கினர்.

பெர்சேயின் மகத்தான சாதனை அந்த அச்ச உணர்வை மக்களிடமிருந்து நீக்கியதுதான் என்று அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.

பெர்சே தொடுத்த தாக்குதல்களினால் தேர்தல் ஆணையம் நடுக்கம் கண்டுள்ளதை அந்த ஆணையம் விடும் அறிக்கைகளிலிருந்து தெரிந்துகொள்ளலாம். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் குளறுபடிகள் இருக்கின்றன என்பதை மக்கள் புரிந்துகொண்டு விட்டனர். அக்குளறுபடிகளை அகற்றுவதற்கான போராட்டம் தொடரும் என்பதை வலியுறுத்திய அம்பிகா, மக்களை முட்டாளாக்க முடியாது என்பதை அரசாங்கம் உணர வேண்டும் என்றார்.

அரசாங்கம் ஏன் தயங்குகிறது?

தேர்தல் சீர்திருத்தத்திற்கு பெர்சே முன்வைத்த எட்டு கோரிக்கைகளை ஏற்க அரசாங்கம் ஏன் தயங்குகிறது?

இத்தனை ஆண்டுகளாக அனுபவித்தவற்றை இழக்க நேரிடுமே என்ற அச்சம். மக்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றம் வெற்றியடைவதற்கு பெர்சே முன்மொழிந்துள்ள சீர்திருத்தங்கள் வழிவகுக்கும் என்பதுதான் தயக்கத்திற்கு காரணம் என்றார் அம்பிகா.

ஏன் இந்த வேண்டாத வேலை?

வழக்குரைஞராக தொழில் புரிந்த காலத்தில் பிரச்னைகள் ஏதும் இன்றி இருந்தீர்கள். ஏன் பெர்சே போராட்டத்தில் இறங்கி வம்பை விலை கொடுத்து வாங்கினீர்கள்?

வழக்குரைஞர் மன்றத்தின் தலைவராக இருந்தபோது பெர்சே இயக்கத்திற்கு தலைமை ஏற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டேன். முதலாவது பெர்சே பேரணி அரசியல்வாதிகளால் ஏற்பாடு செய்யப்பட்டதால் அதில் தாம் பங்கேற்கவில்லை. அதன் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்ட பெர்சே பேரணிகளில்  முழுமையாக ஈடுபட்டேன். அரசாங்கத்தின் எதிர்ப்பு தீவிரமான அளவிற்கு தமது ஈடுபாடும் தீவிரமாயிற்று என்று அம்பிகா பதில் அளித்தார். இது வம்பு அல்ல. கடமை என்றாரவர்.

மஞ்சள் உடையணிவது?

மஞ்சள் உடை அணிவது சட்டவிரோதமானதா என்று கேள்விக்கு உள்துறை அமைச்சர் பெர்சே இயக்கம் சட்டவிரோதமானது என்று செய்திருந்த அறிவிப்பு சட்டவிரோதமானது என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தவர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்திற்கிடையில் அம்பிகா கூறினார்.

ஊடகத்தினரே, உங்கள் நிலைபாடு என்ன?

இறுதியாக, கேள்விகள் கேட்ட நான்கு தமிழ் நாளிதழ்களின் ஆசிரியர்களிடம் அம்பிகா இரு கேள்விகளைக் கேட்டார்.

1. முன்னிலை ஊடகங்கள் செயல்முறைகள் மீது நீங்கள் மனநிறைவு அடைகிறீர்களா?

2. எதிர்கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் முதலில் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று அமைச்சு ஆலோசனை தெரிவித்திருப்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

முதல் கேள்விக்கு பதில் அளித்த ஆசிரியர்கள் தங்களுடைய சக்திக்கு ஏற்றவரையில் பாரபட்சமின்றி செய்திகள் வெளியிட்டிருப்பதாக கூறினர். கண்களை மூடிக்கொண்டு எதனையும் இருட்டடிப்பு செய்ய வேண்டியதில்லை என்று உறுதியாகக் கூறினர். தங்களுக்கு எவரும் உத்தரவிடுவதை விரும்பவில்லை என்றும் கூறினர். மலேசியாகினையைப்போல் பெர்சே போராட்டம் குறித்து விரிவான செய்திகள் வெளியிடப்பட்டதை அவர்கள் சுட்டிக் காட்டினர்.

ஒரு நாளிதழின் ஆசிரியர் தாங்கள் இந்நாட்டிலுள்ள எந்தத் தினசரிக்களுக்கும் சளைத்தவர்கள் அல்ல. போட்டிக்கு தயார் என்று சவால் விடுத்தார்.

இரண்டாவது கேள்விக்கு, அனைவரும் ஒரே பதிலைக் கூறினார்: அமைச்சின் ஆலோசனை ஏற்புடையதல்ல.

இந்நிகழ்ச்சியின் இறுதிக் கட்டத்தில், இந்நாட்டு குடிமக்களாகிய நாம் பெரும்பான்மையினர் என்று அம்பிகா கடந்த ஆண்டு சுங்கை சிப்புட்டில் தமிழில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி வாசிக்கப்பட்டது: [ காணொளி ]

“சகோதர சகோதரிகளே, வணக்கம்!”

இந்த நாட்டின் குடிமக்களாக, நாம் எப்படி ஒருவரை ஒருவர் பார்க்கிறோம், நம்மை எப்படி விவரிக்கிறோம், என்பதை மறுபடியும் மதிப்பீடு செய்ய வேண்டும், என்ற கோரிக்கையுடன் என் உரையைத் தொடங்குகிறேன்.

மலேசியாவில், நான் ஒரு சிறுபான்மை இனத்தை சேர்ந்தவள், என்று சொன்னார்கள். அதை ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

இன்று, நான் அதை மறுக்கிறேன். நான் பெரும்பான்மையை சார்ந்தவள். இந்நாட்டின் குடிமகள், என்பதை உறுதியுடன் கூறுகிறேன்.”