தாசெக் சினி என்ற ஏரிக்கு அருகில் சுரங்க நடவடிக்கைகளும் வெட்டுமர நடவடிக்கைகளும் தங்கு தடையின்றித் தொடருமானால் அது 2030 வாக்கில் சூழியல் ரீதியில் முற்றாகச் சீர்குலைவை எதிர்நோக்கும் என டிஐ-எம் என்ற அனைத்துல மலேசியா வெளிப்படை அமைப்பு எச்சரித்துள்ளது.
அந்த ஏரியைச் சுற்றிலும் உள்ள ஆறு கிராமங்களில் வசிக்கும் 500 பேர் (பெரும்பாலும் ஜாக்குன் பழங்குடி இனத்தைச் சார்ந்தவர்கள்) நடப்பு நடவடிக்கைகளை நிறுத்தா விட்டால் பெரிதும் பாதிக்கப்படுவர் என அந்த அமைப்பின் ஆய்வுக் குழு முடிவு செய்துள்ளது.
அந்தத் தகவலை டிஐ-எம்-மின் தலைமைச் செயலாளர் ஜோஸி எம் பெர்னாண்டெஸ் வெளியிட்டார்.
“அங்கு நிலைமை மோசமடைந்து வருகின்றது. நாங்கள் கடந்த ஞாயிற்றுக் கிழமை அங்கு சென்றிருந்தோம். நாங்கள் பேரழிவைப் பார்த்தோம். காடுகள் அழிக்கப்படுவதை நாங்கள் கண்டோம்.”
“சுரங்க நடவடிக்கைகளிலிருந்து வெளியாகும் கழிவுகள் தாசெக் சினி-க்குள் கொட்டப்படுகின்றன. அதனால் தூய்மைக்கேடு ஏற்பட்டுள்ளது. அதே விகிதத்தில் தூய்மைக் கேடு தொடருமானால் 2030ல் அந்த ஏரி முற்றாக அழிந்து விடும்,” என பெர்னாண்டெஸ் நேற்று தொடர்பு கொள்ளப்பட்ட போது கூறினார்.
தாசெக் சினி மலேசியாவின் இயற்கையான இரண்டாவது பெரிய உள்நாட்டு ஏரியாகும். அது குவாந்தானுக்குத் தெற்கில் 100 கிலோ மீட்டர் தென் கிழக்கில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பெக்கான் நாடாளுமன்றத் தொகுதிக்குள் அமைந்துள்ளது.
அமலாக்கம் சீராக இல்லை
மாநில அரசாங்கமும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்புக்களும் அமலாக்க நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளவில்லை என்றும் தாசெக் சினி மக்களுடைய ஆரோக்கியம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றும் பெர்னாண்டெஸ் சொன்னார்.
“அந்தப் பகுதியில் நிகழ்வதை மாநில அரசாங்கம் கண்காணிக்கிறதா ? சுரங்க நடவடிக்கைகளுக்கும் வெட்டு மர நடவடிக்கைகளுக்கும் அனுமதி கொடுப்பதற்கு யார் பொறுப்பு ?”
“அந்த அனுமதிகள் கொடுக்கப்படுவதற்கு முன்னர் சுற்றுச்சூழல் தாக்கம் மீது மதிப்பீடுகள் செய்யப்பட்டதா ?”
மலேசியாவில் சுற்றுச்சூழல் நிர்வாகம் பல அமைப்புக்களால் மேற்கொள்ளப்படுகின்றன. கூட்டரசு, மாநில நிலையிலான அமலாக்க அமைப்புக்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பு இல்லை. அதனால் தாசெக் சினி சீர்குலைவுக்கு இலக்காகியுள்ளது என பெர்னாண்டெஸ் வருத்தமுடன் குறிப்பிட்டார்.
தாசெக் சினியைக் காப்பாற்றும் இயக்கத்தை டிஐ-எம் கடந்த ஞாயிற்றுக் கிழமை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. சுரங்க வெட்டுமர நடவடிக்கைகளை நிறுத்துவதே அதன் நோக்கமாகும். அந்த இயக்கத்தின் தொடர்பில் அது பல விளக்கக் கூட்டங்களையும் ஆய்வரங்குகளையும் நடத்தும்.
தாசெக் சினியைக் காப்பாற்ற வேண்டியதின் அவசியம் மீது அது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
அந்த ஏரியை பழைய நிலைக்கு கொண்டு செல்வதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகள் பற்றி யோசனைகளை வழங்க நிபுணர் குழு ஒன்றையும் டிஐ-எம் அமைக்கும்.