டாத்தாரான் மெர்தேக்காவில் சுதந்திர நாள் கொண்டாட்டங்களின் தொடர்பில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள ‘Janji Bersih’ பேரணிக்கு விடுக்கப்பட்டுள்ள மருட்டல்கள் மீது பெர்சே இணைத் தலைவரான ஏ சாமாட் சைட் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளார்.
“நாங்கள் புனிதமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அதற்கு நாங்கள் ‘கறை’ ( kotor ) படிந்தவர்கள் என்றும் சட்டத்தை மீறுகின்றவர்கள் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளோம்,” பாக் சாமாட் என அழைக்கப்படும் அந்த தேசிய இலக்கியவாதி சொன்னார்.
ஆகஸ்ட் 30ம் தேதி இரவு ‘Janji Bersih’ கூட்டம் நடைபெறுமானால் தனது உறுப்பினர்கள் தீவிரமாகப் பதிலடி’ கொடுப்பார்கள் என பெர்சே எதிர்ப்பு அமைப்பான கோலாலம்பூர் சிறு வணிகர் நடவடிக்கை மன்றம் வெளியிட்டுள்ள மருட்டல் பற்றி வினவப்பட்ட போது சாமாட் அவ்வாறு கூறினார்.
மக்களுக்கும் சிறு வணிகர்களுக்கும் சிரமங்களைக் கொண்டு வரும் அரசியல் விளையாட்டுக்களில் தாம் சோர்வடைந்து விட்டதாகக் கூறிக் கொண்ட அந்த மன்றத் தலைவர் ஜமால் முகமட் யூனுஸ், அந்தக் கூட்டம் “நடைபெறாமல் தடுப்பதற்கு சிறு வணிகர்கள் தீவிரமாகப் பதிலடி கொடுப்பார்கள் என்று கூறியதாக மலாய் நாளேடான பெரித்தா ஹரியான் திங்கட்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.
“தீவிரம்” என்பதற்கு என்ன அர்த்தம்
புகழ் பெற்ற செக்கிஞ்சாங் ஈக்கான் பாக்கார் உணவு விடுதிகளை நடத்தும் ஜமால், பெர்சே 3.0ல் ஆற்றிய பங்கிற்காக அதன் இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு வெளியில் ‘ஆட்சேப சந்தையை’ நடத்தப் போவதாக ஏற்கனவே மருட்டியிருந்தார்.
தீவிர நடவடிக்கை என மருட்டப்பட்டுள்ளது பற்றிக் குறிப்பிட்ட சாமாட், ” அது ஜமாலுடைய உரிமை ஆகும். தீவிர நடவடிக்கை என அவர் சொல்வதின் அர்த்தம் என்ன என நாங்கள் அவரிடம் கேட்கிறோம்.”
Janji Bersih தொடர்பில் போக்குவரத்து மற்றும் இதர விஷயங்களை விவாதிக்க இன்னொரு கூட்டம் இன்றிரவு நடைபெறும் என்றும் அவர் சொன்னார்.
தூய்மையான நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கு தான் அளித்துள்ள வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என அதற்கு நினைவூட்டும் பொருட்டு டாத்தாரான் மெர்தேக்காவில் நடத்தப்படும் அந்த நிகழ்வில் பங்கு கொள்கின்றவர்கள் மஞ்சள் உடையை அணிந்திருக்க வேண்டும்.
அவர்கள் மெர்தேக்கா தினத்தை வரவேற்கும் பொருட்டு அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுகளிலும் பங்கு கொள்வார்கள்.