மலேசியாவின் முன்னாள் பூப்பந்து வீரர் பஞ்ச் குணாளன் (வயது 68), இன்று காலை சுபாங் ஜெயா மருத்துவமனையில் காலமானார்.
பூப்பந்தாட்டத்தில் புகழ்பெற்று விளங்கியவர்களில் பஞ்ச் குணாளனும் ஒருவர். 60-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் நெகிரி செம்பிலான் பெட்மிண்டன் போட்டிகளில் (1961-1963) ஆண்கள் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆட்டங்களில் அபாரமான ஆட்டத்திறமையை வெளிப்படுத்தினார் குணாளன்.
1962-இல், கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசிய இளைஞர் பெட்மிண்டன் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிக் கோப்பையைத் தட்டிச் சென்றதன் வழி அனைவரின் கவனத்துக்குரிய ஆட்டக்காரர் ஆனார்.
1970இலும் 1973இலும் தோமஸ் கிண்ணக் குழுவில் இடம்பெற்ற பெருமையும் அவருக்கு உண்டு. 1970-இல், ஆசிய விளையாட்டுகளில் ஆண்கள் இரட்டையர் ஆட்டத்தில் நாட்டுக்குத் தங்கம் பெற்றுத்தந்தார்.
1974-இல், நியூசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் ஒற்றையர் ஆட்டத்தில் தங்கமும் இரட்டையர் ஆட்டத்தில் வெண்கலமும் வென்றார்.
குணாளன் 1969-இலும் 1974-இலும் தேசிய விளையாட்டு வீரர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
போட்டி விளையாட்டுகளிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் பயிற்றுனர் பணியை மேற்கொண்ட அவர், 1992-இல் மலேசிய தோமஸ் கிண்ணக்குழுவின் தலைமைப் பயிற்றுனராக பணியாற்றினார்.
-பெர்னாமா