அன்வார்: என்எப்சி விவகாரத்தில் நோ பதவி விலகாதது ஏன்?

நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) ரிம250மில்லியன் ஊழல் விவகாரத்தில் விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சு சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்த பின்னரும் அதன் அமைச்சர் நோ ஒமார் தொடர்ந்து பதவியில் இருப்பதற்காக அவரை மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் சாடினார்.

“மாடுகள், கொண்டோ விவகாரத்துக்குப் பொறுப்பேற்று நோ(வலம்) பதவி விலகவில்லை,அப்படி இருக்கும்போது அவர் மற்றவர்கள் பதவி விலக வேண்டும் என்று மூக்கை நுழைப்பது ஏன்?”,என்றவர் வினவினார்.

சிலாங்கூர் மாநில நீர் விவகாரத்துக்குத் தீர்வு காண முடியாவிட்டால் மந்திரி புசார் பதவி விலக வேண்டும் என்று கூறிவரும் நோ-வுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அன்வார் அவ்வாறு குறிப்பிட்டார்.அவர், நேற்றிரவு, ஷா ஆலமில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.

நாட்டின் இறைச்சி உற்பத்தியை அதிகரிப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன் திட்டம். அந்நிறுவனம் அம்னோ மகளிர் தலைவி ஷரிசாட் அப்துல் ஜலிலின் கணவருக்கும் பிள்ளைகளுக்கும் சொந்தமானது.அந்நிறுவனம், அதற்கு எளிய நிபந்தனைகளில் கொடுக்கப்பட்ட ரிம250மில்லியன் கடனில் ஒரு பகுதியை ஆடம்பர சொத்துகள் வாங்குவதற்கும் விடுமுறையைக் கழிப்பதற்கும் தவறான முறையில் பயன்படுத்திக்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அன்வார் இப்ராகிம் பிரிமேசன் இரகசிய அமைப்பைச் சேர்ந்தவரா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி விடுத்துள்ள அறைகூவல் குறித்து வினவியதற்கு அதை அவர் புறம்தள்ளினார்.

“ஆதாயம் தேடுவதற்காக அப்படியெல்லாம் சொல்கிறார்கள்…இந்தப் புனித ரமலான் மாதத்தில் முஸ்லிமாகிய அவர் எவரையும் அவமதித்தல் கூடாது”, என்று  அன்வார் குறிப்பிட்டார்.

அக்குற்றச்சாட்டுக்கு நேற்று எதிர்வினையாற்றிய அன்வாரின் உதவியாளர் நஜ்வான் ஹலிமி, பிரிமேசன் உறுப்பினர் பட்டியலில் குறிப்பிடப்படும் அன்வார் இப்ராகிம் வேறொருவர் என்றார்.அவர் “பானை போன்ற வயிறுகொண்ட ஓர் அராபியர்”, என்றாரவர்.