அன்வார்: ‘அடையாளக் கார்டு திட்டம்’ மீதான விசாரணையை நான் நிராகரிக்கவில்லை

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம், தாம் துணைப் பிரதமராக இருந்த காலத்தில் சபாவில் வாக்குகளுக்காக குடியுரிமை வழங்கப்பட்ட ரகசிய நடவடிக்கை பற்றி விசாரணை நடத்தப்படுவதற்கு தாம் எதிர்ப்புத் தெரிவித்ததாக கூறப்படுவதைத் தொடர்ந்து அந்த ‘அடையாளக் கார்டு திட்டம்’ மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்திற்கு உதவுவதற்குத் தாம் தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார்.

“எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. தாம் அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் இருந்த காலத்தில் அந்த விவகாரம் மீது தமக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்கப்படவில்லை என்றாலும் நான் முழு ஒத்துழைப்பு கொடுக்கத் தயாராக இருக்கிறேன்,” என அவர் நேற்றிரவு ஷா அலாமில் கூறினார்.

“அந்தப் பணி என்னிடம் ஒப்படைக்கப்படவில்லை. அந்த முடிவு தொடர்பான எந்தக் கூட்டங்களிலும் கலந்து கொள்ள நான் அனுமதிக்கப்படவில்லை. அது தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் பார்வையிலும் அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கீழ் இயங்கிய சிறப்புப் பிரிவின் பார்வையிலும் மேற்கொள்ளப்பட்டதாக நான் அறிகிறேன்.”

வெளிப்படையான போக்கு அவசியம் என வலியுறுத்திய அன்வார், அந்தத் திட்டத்திற்குப் பொறுப்பானவர்கள் எனக் கூறப்படும் எந்தத் தரப்பையும் ஆர்சிஐ விசாரணை பாதுகாக்கக் கூடாது என்றார்.

1994ம் ஆண்டு அன்வார் அரசாங்கத்தில் இருந்த போது ஆர்சிஐ அமைக்கப்படுவதை நிரகாரித்த முதல் மனிதர் என மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் கூறியுள்ளது பற்றிக் கேட்கப்பட்ட போது நடப்பு ஆணையம் விசாரணைகளை நடத்தும் போது உண்மை வெளி வரும் என அன்வார் பதில் அளித்தார்.

“அதனால் தான் நான் சொல்கிறேன், ‘பின்னர் எப்படி நீங்கள் உண்மையை கண்டு பிடிக்க முடியும்’ ? ஆர்சிஐ திறந்த போக்குடன் செயல்பட்டால் மட்டுமே அதனை அறிய முடியும்.”

சுவா-வையும் சாடிய அன்வார், அவர் அம்னோவின் ‘மலிவான பேச்சாளர்’ என்று வருணித்தார். மசீச-வை அல்லது அது சார்ந்துள்ள சமூகத்தைப் பிரதிநிதிப்பதற்கும் சுவா ஆற்றல் இல்லாதவர் என்றும் அன்வார் சொன்னார்.

“வேறுபாடு காட்ட வேண்டாம்”

துவாரான் எம்பி வில்பிரெட் பூம்புரிங், பியூபோர்ட் எம்பி லாஜிம் உக்கின், செனட்ட மைஜோல் மாஹாப் ஆகிய மூன்று மூத்த பிஎன் பேராளர்கள் கட்சி மாறி பக்காத்தான் ராக்யாட்டுக்கு ஆதரவு அளித்துள்ளதை எதிர்த்தரப்புத் தலைவர் தற்காத்துப் பேசினார்.

“பிஎன் அரசாங்கம் சபா மக்களுடைய உரிமைகளுக்கு போராடத் தவறி விட்டதாலும் ஊழலை ஒடுக்கத் தவறியதாலும் ஆர்சிஐ-யைத் தோற்றுவிப்பது மீது ஒரே மாதிரியான நிலையைக் கடைப்பிடிக்கத் தவறியதாலும் தங்களது ஆட்சேபத்தைத் தெரிவிப்பதற்காக அவர்கள் பக்காத்தானுக்கு ஆதரவாக மாறினர்.”

முன்னாள் பிஎன் உறுப்பினர்கள் உட்பட பங்காற்ற விரும்பும் யார் மீது நாம் வேறுபாடு காட்டக் கூடாது என நான் எண்ணுகிறேன்.”

என்றாலும் அடுத்த பொதுத் தேர்தலுக்கான எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர்கள் “குறை கூற முடியாத அளவுக்கு நம்பகத்தன்மை இல்லாவிட்டாலும் நியாயமான அளவுக்கு நல்லவர்களாக இருப்பர்” என அன்வார் உறுதி அளித்தார்.