முஸ்லிம்கள் கிறிஸ்துவ சமயத்துக்கு மாற்றப்படுவதாக கூறப்படுவது தொடர்பில் தாம் அம்பலப்படுத்திய விஷயங்கள் அந்த விவகாரத்தில் பலரை மௌனமாக்கி விட்டதாக ஹசான் அலில் கூறிக் கொண்டுள்ளது “மலிவான தம்பட்டம்” என கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் வருணித்துள்ளார்.
“அவர் அந்த விஷயத்தில் நீதிபதியாகவும் ஜுரியாகவும் செயல்பட்டுள்ளார். போலியானது எனக் கருதப்படும் வீடியோ ஆதாரத்தை வழங்கிய பின்னர் தாம் வெற்றி பெற்று விட்டதாகவும் உண்மையை நிலை நிறுத்தி விட்டதாகவும் ஹசான் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்,” என ஆயர் பால் தான் சொன்னார்.
“அறிவும் நிபுணத்துவமும் பெற்ற அவரைப் போன்ற ஒரு மனிதருக்கு அது போலியான நோக்கங்களைக் கொண்ட ஜோடிக்கப்பட்ட வேலையாகும்,” என மலாக்கா-ஜோகூர் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும் மலேசியா, சிங்கப்பூர், புருணை கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டுத் தலைவருமான ஆயர் பால் தான் சொன்னார்.
“ஹசான் அலி மறைமுகமான தனது அவாவுக்கு நியாயத்தைத் தேடும் மனிதர் ஆவார். எல்லாம் தெரிந்தவர்களைப் போல நடிப்பவர்களுக்கு அவர் நல்ல உதாரணம் ,” என அந்த ஆயர் கருத்துரைத்தார்.
ஒராண்டுக்கு முன்பு டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் மய்யம் ஒன்றில் நடத்தப்பட்ட நிதி திரட்டும் விருந்து குறித்த சர்ச்சை எழுந்தது முதல் ஹசான் அலி முஸ்லிம்களை கிறிஸ்துவர்கள் மதம் மாற்றம் செய்வதாக அபாய ஒலி எழுப்பி வருகிறார்.
அவர் சிலாங்கூர் பாஸ் முன்னாள் தலைவரும் மாநில ஆட்சி மன்ற உறுப்பினரும் ஆவார்.
சில முஸ்லிம்கள் கலந்து கொண்ட அந்த விருந்தில் முஸ்லிம்கள் மதம் மாற்றம் செய்யப்படுகின்றனர் என்ற சந்தேகத்தின் பேரில் சிலாங்கூர் சமய விவகாரத் துறை திடீர் சோதனைகளை நடத்தியது. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகள் உறுதியாக எதனையும் தெரிவிக்கவில்லை.
ஆனால் அங்கு கிறிஸ்துவ சமயத்திற்கு மத மாற்றம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஹசான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதனால் இறுதியில் அவர் பாஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். ஆட்சிமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் அகற்றப்பட்டார்.
முஸ்லிம்களை கிறிஸ்துவர்கள் மதம் மாற்றம் செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ஹசான் அலி -யின் ஜாலுர் ஜாத்தி ஏற்பாடு செய்த கூட்டங்களில் மக்கள் குறைவான எண்ணிக்கையில் கலந்து கொண்டுள்ளதே பொது மக்கள் அவருடைய கருத்துக்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்கு நல்ல எடுத்துக் காட்டு எனவும் ஆயர் பால் தான் குறிப்பிட்டார்.
“உணர்வுகளைத் தூண்டும் ஹசான் அறிக்கைகளுக்கு பொது மக்கள் மயங்கவில்லை என்பதை அது காட்டியது. அவர் கும்பல் உணர்வைத் தூண்டுகின்றவர் என்பதையும் மக்கள் அறிந்துள்ளனர்.”
“நமது சமுதாயத்தில் அமைதி நிலவ வேண்டும் என விரும்பும் சாதாரண மக்களுடைய நல்ல எண்ணத்திற்கு நான் நன்றி கூறுகிறேன்,” என்றும் ஆயர் தெரிவித்தார்.