ஹுடுட் மீதான பாஸ் நிலை குறித்து முன்னாள் துணைத் தலைவர் நசாருடின் மாட் ஈசா கேள்வி எழுப்பிய பின்னர் தாம் அவரை கட்சியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாக பெர்னாமா வெளியிட்ட தகவலை பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் மறுத்துள்ளார்.
“சில இணையத் தளங்களில் வெளியானது போல நான் யாரையும் கட்சியிலிருந்து விலகுமாறு அறிக்கை விடுக்கவில்லை.”
“கட்சியிலிருந்து விலகுவது அந்த தனி நபரையும் பாஸ் மத்தியக் குழுவையும் பொறுத்ததாகும்,” என அவர் தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நசாருடின் பாஸ் கட்சிக்குப் பிரச்னைகளை ஏற்படுத்துவதற்குப் பதில் அதிலிருந்து வெளியேறுவது நல்லது என கிளந்தான் மந்திரி புசார் கேட்டுக் கொண்டதாக நேற்று பெர்னாமா தகவல் வெளியிட்டது.
கட்சியிலிருந்து விலக எந்தத் தலைவரும் முடிவு செய்தால் அதற்காக தாம் ஆச்சரியப்படப் போவதில்லை என்று மட்டுமே தாம் சொன்னதாக நிக் அஜிஸ் விளக்கினார்.
“அந்தச் சர்ச்சையில் மெக்காவில் அம்னோ தலைவர் ஒருவருடன் பாஸ் தலைவர் ஒருவர் காணப்பட்டது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை மீது நான் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.”
“என்னைப் பொறுத்த வரையில் என்னுடைய நிலை தெளிவானது. எல்லாத் தரப்புக்களும் அதனைப் புரிந்து கொண்டுள்ளன,” என்றார் அவர்.
மலேசியாவில் இஸ்லாமியக் குற்றவியல் சட்டத்தை (ஹுடுட்) அமலாக்கும் யோசனையை தோழமைக் கட்சியான டிஏபி நிராகரித்துள்ளதால் பாஸ் கட்சி பக்காத்தான் ராக்யாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என நஷாருடின் மெக்காவிலிருந்து டிவி3ன் பிரதான செய்திகளுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். அதனை உத்துசான் மலேசியா செய்தியாக வெளியிட்டிருந்தது.
மெக்காவில் நஜிப்புடன் நஷாருடின் காணப்படும் படம் ஒன்றை அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் தனது முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இஸ்லாமிய மாநாட்டு நிறுவனத்தின் சிறப்பு உச்ச நிலைக் கூட்டத்தில் கலந்து கொள்ள நஜிப் சென்றுள்ளார். அவர் சவூதி அரேபியாவைச் சேர்ந்த பல சமய அறிஞர்களையும் சந்தித்தார்.