மேனகா: நான்கு முதன்மை தமிழ் நளேடுகளோடு அம்பிகாவையும் வைத்து செம்பருத்தி.கொம் நடத்திய விவாத மேடை அரசியல் சார்புடையதா?
கோமாளி: கண்டிப்பாக மேனகா, அரசியல் என்பதற்கும் கட்சி அரசியல் எனபதற்கும் வேறுபாடு உள்ளது. நமக்கு இது பற்றிய சரியான புரிந்துணர்வு இல்லாததால் அரசியல் என்பதை பலர் சரியாக மதிப்பீடு செய்வதில்லை.
உரிமையை கோரும் எல்லா சொற்களும் அரசியல் கோரிக்கையாகும். பிறக்கும் ஒரு குழந்தையின் முதல் அழுகையே அரசியல்தான். அது தனது உரிமையை கேட்கிறது, அதை நிறைவுசெய்ய மறுப்பது குற்றம் என்பது இயற்கையின் நியதி.
“ஆட்சி செய்வதற்குரிய கலையும், அறிவியலும் ஆகும்.” அல்லது
“பொதுத் திட்டங்களுக்காக, மக்கள் ஆதரவைத் திரட்டுவதன்மூலம், முரண்பாடுகளைத் தீர்க்கும் ஒரு நடைமுறையாகும்” என்பவையும் அரசியல் என்பதற்கான விளக்கங்கள் ஆகும்.
ஒரு இரட்டை குழாய் துப்பாக்கி முனையில்தான் அதிகாரம் பிறக்கிறது என்ற மாவோ செடாங், “அரசியல் என்பது இரத்தம் சிந்தாத போர். போர் என்பது இரத்தம் சிந்தும் அரசியல்” என்கிறார்.
கட்சி அரசியல் என்பது அரசியல் கட்சிகள் சார்புடையவை. அவை தேர்தல் வழி எப்படி அரசியல் அதிகாரத்தை பெறுவது என்பதற்காக பயன்படுத்தப்படும் அமைப்புகள். அவையின் கொள்கைப் பிரச்சாரம் நடவடிக்கை போன்றவை கட்சி அரசியலை சார்ந்தவை.
மக்களின் உரிமையை பேசுவது அரசியல். அதை எல்லா மனிதர்களும் பேசுவார்கள், பேச வேண்டும். கட்சி அரசியலை ஆதரிப்பதும் விமர்சிப்பதும் கூட அரசியல்தான்.
அம்பிகாவுடன் ஊடகங்கள் நடத்திய விவாத மேடை பல புதிய கோணகங்களில் மக்கள் எப்படி அரசியலை பார்க்க வேண்டும், அரசியல் கட்சிகள் எப்படி நம்மை குழப்புகின்றன என்பதை வெளிக்கொணர்ந்தன.
தூயத்தேர்தலை நடத்த வக்கற்ற நிலையில் தேசிய முன்னணி அரசு எப்படியும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என கங்கணம் கட்டி ஆடுவது ஒரு மோசமான கட்சி அரசியல் செயல். அதை எதிர்த்து போரடும் மாற்று அரசியல் கட்சிகள் சனநாயக அதிகாரம் என்பது மக்களிடம்தானிருக்க வேண்டும் என்பது நியாயமான கட்சி அரசியல்.
இவற்றை விவாதிப்பதும், மக்கள் உரிமைகளை பெற செயல்படுவதும் அரசியல் ஆகும். இது போன்ற விவாதங்களில் கட்சி அரசியலின் தாக்கங்களை அலசாமல் விவாதிக்க இயலாது.
மேனகா, அரசியல் என்பது ஒரு சாக்கடை கிடையாது. ஆனால் அப்படியான உருவாக்கத்தை செய்து அதில் உருண்டு புரளும் அரசியல் கட்சிகளை அகற்றி அதை சுத்தப்படுத்த முயலுவதுதான் மக்களின் அரசியல் வேட்கையாக இருக்க வேண்டும். அதை முன்ணிலை படுத்தும் தார்மீக கடமை ஊடகங்களுக்கு உண்டு. பேனா முனை என்பது மாவோ செடாங்கின் இரட்டை குழாய் துப்பாக்கிமுனை அதிகாரத்தை விட மேலும் வலுவானதாகும்.