‘பூஞ்சாக் நியாகா இயக்குநர்களுக்கான கட்டணம் 17.2 மில்லியன் ரிங்கிட் பெரிய கிறுக்குத்தனம்’

பூஞ்சாக் நியாகா ஹோல்டிங்ஸ் சென் பெர்ஹாட் இயக்குநர்களுக்குக் கட்டணமாக 17.2 மில்லியன் ரிங்கிட் கொடுக்கப்பட்டுள்ளது-அதுவும் அது வழங்கும் சேவை திருப்திகரமாக இல்லாமலும் இழப்பையும் எதிர்நோக்கு சூழலில் ‘கிறுக்குத்தனமானது’ என தண்ணீர் தனியார் மயத்துக்கு எதிராக கூட்டமைப்பு வருணித்துள்ளது.

சபாஷ் எனப்படும் Syarikat Bekalan Air Selangor-ன் ( சிலாங்கூர் தண்ணீர் விநியோகிப்பாளர்) தலைமை நிறுவனமான  பூஞ்சாக் நியாகா எவ்வளவு இழப்பை எதிர்நோக்கினாலும் அதன் உயர் நிர்வாக அதிகாரிகள் சகாயங்களை அனுபவித்து வருவதாக அந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சார்லஸ் சண்டியாகோ கூறினார்.

“அந்த நிறுவனம் நஷ்டத்தில் ஒடுகிறது. ஆனால் பொது மக்களையும் ஊழியர்களையும் பாதிக்கும் வகையில் உயர் தலைமைத்துவத்திற்குக் கூடுதலாகக் கொடுக்கப்படுகின்றது. ,’ என சண்டியாகோ மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

இந்த நாட்டில் அதிகமான ஊதியம் பெறும் 50 இயக்குநர்கள் பட்டியலை நேற்று மலேசியன் பிஸினெஸ் நாளேடு வெளியிட்டிருந்தது பற்றி அவர் கருத்துரைத்தார்.

அதில் பூஞ்சாக் நியாகா 16வது இடத்தில் இருந்தது. கடந்த ஆண்டு மட்டும் ஒரு இயக்குநருக்கு 8.35 மில்லியன் ரிங்கிட் முதல் 8.4 மில்லியன் ரிங்கிட் வரையில் கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்களின் ஆண்டறிக்கை அடிப்படையில் அந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதிக ஊதியம் கொடுக்கப்பட்ட பூஞ்சாக் நியாகா இயக்குநரை அந்த ஏடு அடையாளம் காட்டவில்லை.

அந்த நிறுவனம் ஒர் ஆண்டில் வரிக்கு முந்திய இழப்பாக 75.2 மில்லியன் ரிங்கிட்டை பதிவு செய்த வேளையில் இயக்குநர்கள் கட்டணமாக மொத்தம் 17.2 மில்லியன் ரிங்கிட் கொடுக்கப்பட்டுள்ளது.

உண்மையில் பூஞ்சாக் நியாகா 2007ம் ஆண்டு தொடக்கம் நஷ்டத்தைப் பதிவு செய்து வருகின்றது. 2007ல் அதன் வரிக்கு முந்திய இழப்பு 435.7 மில்லியன் ரிங்கிட் ஆகும்-ஆனால் இழப்பு படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகின்றது.

பூஞ்சாக் நியாகா பொதுப் பயனீட்டு நிறுவனம் என்பதால் அது தனது வாரிய உறுப்பினர்களுக்கு இவ்வளவு ஊதியம் கொடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என கிள்ளான் எம்பி-யுமான சண்டியாகோ சொன்னார்.

சிலாங்கூரில் நீர் விநியோகத்தைச் செய்து வரும் சபாஷ் நிறுவனம் பூஞ்சாக் நியாகாவுக்குச்  சொந்தமானதாகும்.

அதிகமான படிப்படியான தண்ணீர் கட்டண உயர்வுகளுக்கு எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளிக்கும் ஏற்றத்தாழ்வான சலுகை ஒப்பந்தத்தை முன்பு சிலாங்கூரில் ஆட்சி செய்த பிஎன் பூஞ்சாக் நியாகாவுக்கு வழங்கியுள்ளதாக குறை கூறப்பட்டுள்ளது.

நடப்பு பக்காத்தான் ராக்யாட் அரசாங்கம் பூஞ்சாக் நியாகாவின் அடைவு நிலையைக் குறிப்பாக வருமானம் இல்லாத தண்ணீர் அளவை அது குறைக்கவில்லை என குறை கூறியுள்ளது.

ஸ்பான் என்ற தேசிய நீர் வளச் சேவை ஆணையம் அந்த சலுகை ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்து பூஞ்சாக் நியாகா கொள்ளையடிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சண்டியாகோ கேட்டுக் கொண்டார்.

சிலாங்கூர் அரசாங்கத்துடன் தான் செய்து கொண்ட சலுகை ஒப்பந்தத்தையும் அதன் தணிக்கை அறிக்கையையும் வெளியிடுமாறு சபாஷ் நிறுவனத்தைக் கட்டாயப்படுத்தும் முயற்சியில் உயர் நீதிமன்றத்தில் வெற்றி கொண்ட மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் நடவடிக்கையில் சண்டியாகோவும் ஒரு தரப்பாகும்.

அதிகாரத்துவ ரகசியச் சட்டத்தின் கீழ் அந்த ஆவணங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஆனல் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக முறையீடு செய்து கொள்வதில் சபாஷ் வெற்றி கண்டுள்ளது.

எழுத்துப்பூர்வமான தீர்ப்புக்காக தொழிற்சங்கக் காங்கிரஸ் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறது. கூட்டரசு நீதிமன்றத்துக்கு மேல் முறையீடு செய்து கொள்ள அந்தத் தீர்ப்பு அவசியமாகும்.