அமைச்சர்: பிரிக்பீல்ட்ஸில் புதிய போலீஸ் நிலையம் கட்டப்படும்

முன்பு பிரிக்பீல்ட்ஸில்  போலீஸ் மாவட்டத் தலைமையகம் அமைந்திருந்த பகுதியில் பல வகையான  மேம்பாட்டுடன் புதிய போலீஸ் நிலையமும் கட்டப்படும் என கூட்டரசுப் பிரதேச நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சர் ராஜா நோங் சிக் ராஜா ஜைனல் அபிடின் வாக்குறுதி அளித்துள்ளார்.

பிரிக்பீல்ட்ஸில் பகுதியில் மக்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் கொண்டுள்ள கடப்பாட்டுக்கு ஏற்ப புதிய போலீஸ் நிலையம் கட்டப்படுதாக அவர் சினார் ஹரியான் மலாய் நாளேட்டிடம் கூறினார்.

புதிய போலீஸ் நிலையம் 3,900 சதுர அடியில் நிர்மாணிக்கப்படும். அதற்கான ஒப்புதலை கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்திடமிருந்து (DBKL) பெறுவதற்காகக் காத்திருக்கிறோம்,” என அவர் ஜாலான் துன் சம்பந்தனில் முன்னாள் போலீஸ் தலைமையகப் பகுதியில் நடந்து சென்ற போது நிருபர்களிடம் கூறினார்.

எந்தத் தரப்புச் செல்வாக்கினாலும் அந்தத் திட்டம் உருவாக்கப்படவில்லை என்றும் ஏற்கனவே அதற்கு முடிவு செய்யப்பட்டு திட்டமிடப்பட்டிருந்தது என்றும் ராஜா நோங் சிக் சொன்னார்.

“அந்த இடத்தில் பல வகையான மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கும் பலகை வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசாங்கம் ஏமாற்றி விட்டதாக சிலர் கூறினர்.”

“அந்த விவகாரம் மேம்பாடு சம்பந்தப்பட்டதாக இருந்த போதிலும் பொதுத் தேர்தல் வருவதால் அதனை அரசியலாக்குவதற்கு சில தரப்புக்கள் முயலுகின்றன,” என்றார் ராஜா நோங் சிக்.

அம்னோ தொடர்பு விளக்கப்படவில்லை

அந்தத் திட்டம் சம்பந்தப்பட்ட நிலப் பேரத்தை அரசாங்கம் விளக்க வேண்டும் என பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் விடுத்த அறிக்கைக்கு அவர் பதில் அளித்தார்.

வர்த்தக நோக்கங்களுக்காக அந்த முன்னாள் மாவட்ட போலீஸ் தலைமையகப் பகுதி மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்புப் பலகையை பார்த்த பின்னர் ஆகஸ்ட் 3ம் தேதி நுருல் அந்த நிலப் பேரம் பற்றி கேள்வி எழுப்பினார்.

டிராவர்ஸ் போலீஸ் நிலையத்தை நல்ல முறையில் கட்டியுள்ள பிரிமாமூடா ஹோல்டிங்ஸ் சென் பெர்ஹாட்டுக்கு அந்த நிலம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் மயமாக்கப்பட்டதாகவும் ராஜா நோங் சிக் விளக்கினார்.

ஆனால் அந்த பிரிமாமூடா ஹோல்டிங்ஸ் அம்னோவுடன் தொடர்புடையது என்ற நுருலின் இன்னொரு குற்றச்சாட்டுக்கு அவர் பதில் அளிக்கவில்லை. அந்த நிறுவன இயக்குநர்களில் ஒருவரான மரியானி முகமட் யிட், புக்கிட் பிந்தாங் தொகுதி அம்னோ மகளிர் தலைவி ஆவார். அவர் முன்பு கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற ஆலோசனை வாரியத்தில் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.