ஏப்ரல் 28 பெர்சே 3.0 பேரணி காரணமாக இப்போது ‘Janji Demokrasi’ ( ஜனநாயகத்துக்கான வாக்குறுதி) என இப்போது அழைக்கப்படும் ‘Janji Bersih’ கூட்டத்துக்கு பலர் வர மாட்டார்கள் என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கூறியிருக்கிறார்.
ஏப்ரல் 28ல் நிகழ்ந்த வன்முறைகள் பலருக்குப் ‘பாடமாக’ இருக்கும் என அமைச்சர் சொன்னார். பலர் Janji Bersih மீது அக்கறை காட்டவில்லை,” என்றார் அவர்.
அமைதியையும் நிலைத்தன்மையையும் சீர்குலைக்க முயலும் யார் மீதும் அவர்கள் கூட்ட ஏற்பாட்டாளர்களாக இருந்தாலும் அல்லது மற்றவர்களாக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நான் பொது மக்களுக்கு உறுதி கூறுகிறேன்,” என்றார் அவர்.
தேசிய நாள் கொண்டாட்டங்களுடன் நடத்தப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள அந்தக் கூட்டம் “பெர்சே 3.0ஐ போன்று அவ்வளவு மோசமானதாக” இருக்கும் சாத்தியமில்லை என்றும் ஹிஷாமுடின் குறிப்பிட்டார்.
‘Janji Bersih’ நிகழுமானால் “தீவிரமான நடவடிக்கை” எடுக்கப் போவதாக கோலாலம்பூர் சிறு வணிகர் சங்கம் மருட்டியுள்ளது பற்றிக் கருத்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போது அவர் அவ்வாறு கூறினார்.
மெர்தேக்கா தினக் கொண்டாட்டங்களை வரவேற்க கூட்டரசு அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுகள் நடைபெறும் டாத்தாரான் மெர்தேக்காவின் ஒரு பகுதியில் ‘Janji Bersih’ -யை கூட்டத்தை நடத்தப் போவதாக கடந்த வாரம் 26 அரசு சாரா அமைப்புக்கள் அறிவித்தன.
கூட்டரசு அரசாங்கத்தின் மெர்தேக்கா தினக் கருப்பொருளான ‘Janji Ditepati’-க்கு (வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன) பதில் அளிக்கும் வகையில் பொருத்தமான தேர்தல் சீர்திருத்தங்களுக்கான வாக்குறுதியை அது இன்னும் நிறைவேற்றவில்லை என்பதை உணர்த்தும் பொருட்டு Janji Bersih கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.