எல்எப்எல்: சட்டப்பூர்வ குடியேற்றக்காரர்களை ஒரங்கட்ட வேண்டாம்

சபாவில் ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையம் விசாரணை நடத்தும் போது குடியேற்றக்காரர்களின் உரிமைகளையும் பரிசீபிப்பது அவசியம் என எல்எப்எல் என்ற விடுதலைக்கான வழக்குரைஞர்கள் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. காரணம் அவர்களில் சிலர் சட்டப்பூர்வமானவர்கள் அதனால் அவர்களுக்கு உரிமைகள் கிடைத்திருக்கலாம்.

அந்த மாநிலத்தில் உள்ள குடியேற்றக்காரர்கள் சட்டப்பூர்வமானவர்களாகவும் இருக்கலாம் என்பதை ஆர்சிஐ அங்கீகரிக்க வேண்டும். மற்றவர்கள்  பிறப்பின் மூலமும் விண்ணப்பம் மூலமும் குடியுரிமைகளைப் பெற்றிருக்கலாம் என அது விடுத்த பத்திரிக்கை அறிக்கை கூறியது.

“சபா மற்ற எந்த பரபரப்பான எல்லைப் பிரதேசங்களைப் போன்று எல்லை கடந்த குறுகிய கால நீண்ட கால குடியேற்றத்தைக் கவர்ந்துள்ளது. அவர்கள் சிலர் சட்டப்பூர்வமாக நுழைந்திருக்கலாம். மற்றவர்கள் சட்ட விரோதமாக வந்திருக்கலாம்.”

“என்றாலும் கடந்த கால தவறான நடைமுறைகளை விசாரிக்கும் போது குடியேற்றக்காரர்கள் மற்றும் அகதிகளுடைய தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் பற்றிக் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் பல வகையான வரலாறுகளையும் சூழ்நிலைகளையும் பெற்றுள்ளனர். அவர்களில் பலர் சபாவில் நிரந்தரமாக குடியேறி திருமணமும் செய்து கொண்டுள்ளனர். அல்லது அந்த மாநிலத்தில் பிறந்து அங்கு வாழ்ந்து வருகின்றனர் ,” என எல்எப்எல்-லைத் தோற்றுவித்தவரும் ஆலோசகருமான எரிக் பால்சென் கூறினார்.

ஆர்சிஐ-யை ஆதரிப்பதாகக் கூறிய அது அந்த விஷயம் அளவுக்கு அதிகமாக அரசியலாக்கப்பட்டு விட்டதாகக் குறிப்பிட்டது.

எல்லா தரப்புக்களும் சம சீரான சிந்தனைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் விசாரணைக்கு பங்கம் ஏற்படும் வகையில் மாறுபாடாக நடந்து கொள்ளக் கூடாது என்றும் எல்எப்எல் கேட்டுக் கொண்டது.

“பணயம் வைக்கப்பட்டுள்ள பிரச்னைகள் கடுமையானவை, நீண்ட கால விளைவுகளைக் கொண்டிருந்தாலும் மக்களுடைய குடியுரிமையும் அடிப்படை மனித உரிமைகளும் அரசியல் ஆதாயத்திற்காகவும் பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவும் தியாகம் செய்யப்படக் கூடாது.”

சபாவில் குடியேற்றக்காரர்களுக்கு அடையாளக் கார்டுகல் வழங்கப்பட்டது சட்டப்பூர்வமானதா என்பதை விசாரிப்பதே ஆர்சிஐ-யின் அடிப்படை நோக்கமாகும். முன்னாள் சபா, சரவாக் தலைமை நீதிபதி ஸ்டீவ் சிம் தலைமையிலான ஐவர் கொண்ட அதற்கு விசாரணைகளை முடிக்க ஆறு மாத அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.