‘பாட்மிண்டன் விளையாட்டரங்கத்திற்கு பஞ்ச் குணாளன் விளையாட்டரங்கம் என பெயர் சூட்டுங்கள்’

செராஸ் பாட்மிண்டன் விளையாட்டரங்கத்துக்கு பஞ்ச் குணாளன் பாட்மிண்டன் விளையாட்டரங்கம் என மறு பெயர் சூட்டப்பட வேண்டும் என பிபிபி என்ற மக்கள் முற்போக்குக் கட்சி ஆலோசனை கூறியுள்ளது.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பாட்மிண்டன் விளையாட்டை மேம்படுத்துவதற்கு காலஞ்சென்ற அந்த பாட்மிண்டன் வீரர் மகத்தான பணிகளை ஆற்றியுள்ளதால் அவரைக் கவுரவிக்கும் வகையில் அந்தப் பெயர் மாற்றம் அமையும் என கட்சித் தலைவர் எம் கேவியஸ் கூறினார்.

“காலஞ்சென்ற டத்தோ பஞ்ச் குணாளினின் பங்கை கட்சி அங்கீகரிக்கிறது,” என அவர் சொன்னார்.

அவர் இன்று செந்தூல் பாசாரில் பொது மக்களுக்கு ஆயிரம் ஜாலுர் கெமிலாங் கொடிகளை இலவசமாக விநியோகம் செய்த பின்னர் நிருபர்களிடம் பேசினார்.

68 வயதான குணாளன், கடந்த புதன் கிழமை சுபாங் ஜெயாவில் உள்ள சைம் டார்பி மருத்துவ மய்யத்தில் புற்றுநோய் காரணமாக காலமானார்.

அனைத்து இங்கிலாந்து, தாமஸ் கிண்ணம், ஆசிய விளையாட்டுக்கள் போன்ற பல புகழ் பெற்ற அனைத்துலக பாட்மிண்டன் விருதுப் போட்டிகளில் வெற்றி பெற்று அவர் மலேசியாவுக்குப் புகழைத் தேடித் தந்தார்.

1969ம் ஆண்டும் 1974ம் ஆண்டும் அவருக்கு தேசிய விளையாட்டி வீரர் விருதுகள் கொடுக்கப்பட்டன. அடுத்து அவர் தேசிய பாட்மிண்டன் பயிற்றுநராகப் பணியாற்றினார். 1992ம் ஆண்டு கோலாலம்பூரில் நிகழ்ந்த ஆட்டங்களில் தாமஸ் கிண்ணத்தை தேசியக் குழு வெற்றி பெறுவதற்கு அவர் வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.

ஆசிய பாட்மிண்டன் கூட்டு சம்மேளனத்தின் தலைமைச் செயலாளராகவும் அனைத்துலக பாட்மிண்டன் சம்மேளனத்தின் தலைவராக 2004ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரையிலும் குணாளன் சேவையாற்றியுள்ளார்.

அவர் மலேசியப் பாட்மிண்டன் சங்கத்தின் துணைத் தலைவராக 2005ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.