கூச்சிங்கில் முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவியின் சகோதரருக்குச் சொந்தமான சீனி சுத்திகரிப்பு ஆலை 2013ம் ஆண்டு இறுதி வாக்கில் உற்பத்தியைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சபா, சரவாக்கில் சுத்திகரிக்கப்பட்ட சீனியைத் தயாரிப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ள ஒரே நிறுவனமான அட்முடா ( Admuda ) 130 மில்லியன் ரிங்கிட் செலவில் அந்த சீனி சுத்திகரிப்பு ஆலையை நிர்மாணித்து வருகின்றது.
அந்த நிறுவனம் அப்துல்லாவின் இளைய சகோதரரான இப்ராஹிம் அகமட் படாவி பெரிய பங்குதாரராகவும் நிர்வாகத் தலைவராகவும் இருக்கு பிராஹிம் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டின் 60 விழுக்காடு பங்குகளைக் கொண்ட துணை நிறுவனம் ஆகும்.
போர்னியோ சீனி என்ற பெயரில் அட்முடா-வின் தயாரிப்பு விற்பனைக்கு அனுப்பப்படும். அது தனது முதலாம் ஆண்டு நடவடிக்கையின் போது சபா சரவாக்கில் சீனி விற்பனைச் சந்தையில் 30 விழுக்காடு இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்தத் தகவலை அட்முடா தலைவர் அப்துல் அஜிஸ் சம்சுதின் வெளியிட்டதாக வியாழக் கிழமை பெர்னாமா தகவல் ஒன்று கூறியது.
கோலாலம்பூரில் அட்முடாவுக்கும் மே பாங்க் வங்கிக்கும் இடையில் நிதி வசதி உடன்பாடு கையெழுத்தான பின்னர் அப்துல் அஜிஸ் நிருபர்களிடம் பேசினார்.
அந்த கையெழுத்திடும் சடங்கில் அனைத்துலக வாணிக தொழிலியல் துணை அமைச்சர் முக்ரிஸ் மகாதீர் கலந்து கொண்டார்.
மலேசியாவில் சீனி உற்பத்திக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள ஐந்தாவது சீனி சுத்திகரிப்பு ஆலை அதுவாகும். கிழக்கு மலேசியாவில் இயங்கப் போகும் முதலாவது சீனி சுத்திகரிப்பு ஆலை அதுவாகும்.
அது இரண்டு மாநிலங்களிலும் சீனி விலையை தீவகற்ப விலைக்கு ஏற்ப குறைப்பதற்கு உதவும் என கூறப்பட்டுள்ளது. இப்போது அவ்விரு மாநிலங்களுக்கும் தீவகற்பத்திலிருந்து சீனி அனுப்பப்படுகின்றது. அதனால் அங்கு தீவகற்பத்தை விட சீனி விலை அதிகமாகும்.
இப்ராஹிமின் நிறுவனத்துக்கு சபா சரவாக்கில் ஏகபோக சீனி உற்பத்தி அனுமதி வழங்கப்பட்டுள்ளது, சந்தை ஏகபோக உரிமை, சேவகர்களுக்கு உதவுவது போன்ற பல விஷயங்களை எழுப்பியுள்ளது.
கடந்த 25 ஆண்டுகளாக மலேசிய விமான நிறுவனத்துக்கு (எம்ஏஎஸ்) உணவுகளை வழங்கி வரும் பிராஹிம்-ன் ஆதாயகரமான குத்தகை, அந்த தேசிய விமானம் பல ஆண்டுகளாக இழப்பைச் சந்தித்து வருவதைத் தொடர்ந்து மறுசீரமைப்புச் செய்யப்படுவதால் நெருக்குதலுக்கு இலக்காகி இருப்பதால் பிராஹிம் நிறுவனத்துக்கு உயிர் கொடுக்க அந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என மெர்தேக்கா ரிவியூ என்ற சீன செய்தி இணையத் தளம் கேள்வி எழுப்பியுள்ளது.