பினாங்கு மாநிலம் பின்பற்றிய ஊழல் எதிர்ப்பு கொள்கையால் ‘சந்தோஷம்’ எனப்படும் பினாங்கு வீடமைப்பு உதவித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது எம்பதை பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் தமது நோன்புப் பெருநாள் செய்தியில் அந்த மாநில மக்களுக்கு நினைவுபடுத்தியுள்ளார்.
குறைந்த விலை வீடுகள் ( 42,000 ரிங்கிட் ) நடுத்தர விலை வீடுகள் (72,000 ரிங்கிட்) ஆகியவற்றை பழுது பார்க்கவும் மேம்படுத்தவும் சீர்படுத்தவும் 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாக லிம் கூறினார்.
அந்த உதவித் திட்டம் பினாங்கு மக்களுக்கு சிறந்த வாழ்க்கை தரத்தை அளித்து பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என அவர் சொன்னார்.
மலேசிய மாநிலம் ஒன்றில் இது போன்ற உதவித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது இதுவே முதன் முறை என்றும் லிம் குறிப்பிட்டார்.
2011ம் ஆண்டு மாநில அரசாங்கம் மேற்கொண்ட ஊழல் தடுப்பு முயற்சிகள் காரணமாக அந்த ஒதுக்கீட்டைச் செய்ய முடிந்துள்ளது என்றும் அவர் சொன்னார்.
CAT எனப்படும் திறமை, பொறுப்பு, வெளிப்படைக் கொள்கை காரணமாக 2008ல் 88 மில்லியன் ரிங்கிட்டையும் 2009ல் 77 மில்லியன் ரிங்கிட்டையும் 2010ல் 33 மில்லியன் ரிங்கிட்டையும் பினாங்கு அரசாங்கம் மீதப்படுத்த முடிந்துள்ளதாகவும் லிம் குறிப்பிட்டார்.
“குறைந்த விலை நடுத்தர விலை வீடுகளில் வசிக்கும் 600க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அந்தத் திட்டம் மாற்றத்தைக் கொண்டு வரும்,” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.