கோலாலம்பூரில் காந்தி பிறந்த நாள் சொற்பொழிவுகள்

மகாத்மா காந்தியின் 143வது பிறந்த நாளை அனைத்துலக அஹிம்சா நாளாக, உலக நாடுகளுடன் சேர்ந்து மலேசியாவும் கொண்டாடும் என்று தெரிவித்த காந்தி அறக்கட்டளை (ஜிஎம்டி) தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் அக்கொண்டாட்டங்கள் அக்டோபர் 2-இல் அரச லேக் கிளப்பில் நடைபெறும் என்றார்.

மாலை 5மணிக்குத் தொடங்கும் கொண்டாட்டத்தின் முற்பகுதியில் இங்குள்ள ஐநா ஒருங்கிணப்பாளர் கமால் மல்ஹோத்ரா, ஜிஎம்டியின் முன்னாள் தலைவரும் பணி ஓய்வுபெற்ற மேல்முறையீட்டு நீதிபதியுமான மகாதேவ் சங்கர் முதலானோர் உரை நிகழ்த்துவர்.

முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி ஜேம்ஸ் பூங் செங் யுவன் தலைமையில் நடைபெறும் கொண்டாட்டத்தின் இரண்டாம் பகுதியில், சிங்கப்பூர் தூதர் கே.கேசவபாணி, யுனிவர்சிடி சயின்ஸ் மலேசியாவைச் சேர்ந்த டாக்டர் அன்வார் பசால் ஆகியோரின் சொற்பொழிவுகள் இடம்பெறும்.

“அந்நிகழ்வில் 53 ஆண்டுகளாக வாய்ப்புக்குறைந்த பிள்ளைகளுக்குக் கல்விபுகட்டும் பணியில் ஈடுபட்டுள்ள மொண்ட்ஃபோர்ட் பாய்ஸ் டவுனைப் பாராட்டி விருதும் வழங்கப்படும்”, என்று இராதாகிருஷ்ணன் பெர்னாமாவிடம் தெரிவித்தார். அக்டோபர் 2-ஐ அனைத்துலக அஹிம்சா நாளாகக் கொண்டாடுவது என்ற தீர்மானம் 2007 ஜூன் 15இல், ஐநா பேரவையில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது 
என்றாரவர்.

உறுப்பு நாடுகளும் ஐநா அமைப்புகளும் வட்டார அமைப்புகளும், அஹிம்சா உணர்வை வலியுறுத்தவும் அமைதியையும் சகிப்புத்தன்மையையும் புரிந்துணர்வையும் நிலைநாட்டவும் அந்நாளைப் பொருத்தமான  முறையில் கொண்டாட வேண்டும் என்றும் பேரவை கேட்டுக்கொண்டது.

அக்டோபர் 2, 1869 பிறந்தவரான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைக்காக இவர் நடத்திய சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் வழிகாட்டியாக அமைந்து ஊக்குவித்தது.

காந்தி 1948 ஜனவரி 30-இல், பிரார்த்தனைக் கூட்டத்துக்காக சென்றுகொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நிகழ்வுக்கு நுழைவு இலவசம். அது பற்றி மேல்விவரம் அறிய விழைவோர் மின்னஞ்சல்வழி தொடர்பு கொள்ளலாம்.மின்னஞ்சல் முகவரி [email protected].

-பெர்னாமா